Published : 20 Nov 2017 03:35 PM
Last Updated : 20 Nov 2017 03:35 PM
கோயிலில் எப்படி அமர்வது என்பதுகூட ராகுல் காந்திக்கு தெரியாது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிண்டல் செய்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு ஏதாவது ஒரு பிரசித்தி பெற்ற கோயிலுக்குச் சென்றுவிட்டு பிரச்சாரம் செய்வதை பழக்கமாகக் கொண்டுள்ளார். இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், யோகி ஆதித்யநாத் இன்று (திங்கள்கிழமை) லக்னோவில் ஷிகார் சம்மேளன் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஏபிபி செய்தி சேனலுக்கு அவர் பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில், "காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்திக்கு கோயிலில் எப்படி அமர்வது என்பதுகூட தெரியவில்லை. அங்கிருந்த பூசாரி ராகுலிடம் 'இது மசூதி இல்லை கோயில். நமாஸ் செய்வதுபோல் அமராதீர்கள்' என்று எடுத்துரைக்க வேண்டியிருந்தது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதுதான் ராமரும், கிருஷ்ணரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அவர்களின் கூற்றின்படி, அப்படி ராமரும் கிருஷ்ணரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்றால் கோயில்களில் ராகுல் காந்திக்கு என்ன வேலை? ராகுல் காந்தி கோயில்களுக்கு சென்று வருவது வேடிக்கையாகவும் அதேவேளையில் வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது" என்றார்.
ராகுலுக்கு தலைமைப் பதவியா?!
காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான கால அட்டவணை இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், "காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்றால் அதற்கு ராகுல் காந்தியைத் தலைவராக்க வேண்டும். இப்போது அந்தக் கனவை ராகுல் காந்தி நிறைவேற்றிவிடுவார்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT