Last Updated : 29 Nov, 2017 09:09 AM

 

Published : 29 Nov 2017 09:09 AM
Last Updated : 29 Nov 2017 09:09 AM

மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல: ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல; மனைவியை கணவன் தனது சொந்த உடைமை போன்று பயன்படுத்த முடியாது’ என்று ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்அசோகன். இவரது மகள் அகிலா (வயது 25) கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவம் படித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் இவர் முஸ்லிமாக மதம் மாறினார். ஹாதியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு ஷபின் ஜகான் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணத்தை எதிர்த்து பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக தன் மகள் மதம் மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் சேரப் போவதாகவும் தெரிவித்தார். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இத்திருமணம் செல்லாது என்று அறிவித்தது. ஹதியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

மலையாளத்தில் பதில்

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த விசாரணையின்போது, ஹாதியாவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கேரள போலீஸார் ஹாதியாவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தினர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு ஹாதியாவிடம் அரை மணி நேரம் தனியாக விசாரணை நடத்தியது. நீதிபதிகள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, ஹாதியா மலையாளத்தில் பதிலளித்தார். அவரது பதில்களை கேரள மாநில அரசுக்கு ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் வி.கிரி மொழிபெயர்த்தார்.

ஹாதியாவின் விருப்பம் என்ன என்று நீதிபதிகள் கேட்டபோது, ‘நான் என் கணவருடன் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன்’ என்று பதிலளித்தார். வேறு மதத்தை பின்பற்றுவது, படிப்பை தொடருவது ஆகியவற்றில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு, ‘இந்த நாட்டின் நல்ல குடிமகள் என்ற முறையில் நான் விரும்பும் இஸ்லாம் மதத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளேன். அதேநேரத்தில் படிப்பை தொடர்ந்து நல்ல மருத்துவராகவும் இருப்பேன். எனது படிப்புச் செலவுகளை கேரள அரசு மேற்கொள்ள விரும்பவில்லை. எனது கணவர் ஷபின் ஜகான் அந்த செலவுகளை ஏற்றுக் கொள்வார்’ என்றார்.

மனைவிக்கு தனி அடையாளம்

சேலம் கல்லூரியில் பாதுகாவலராக யார் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘எனது கணவரை பாதுகாவலராக நியமிக்க வேண்டும். வேறு யாரும் அந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை’ என்று பதிலளித்தார். அப்போது நீதிபதி சந்திரசூட், ‘ஒரு மனைவிக்கு கணவன் பாதுகாவலராக இருக்க முடியாது. மனைவி என்பவர் கணவரின் உடைமை அல்ல. அவளுக்கென்று தனி அடையாளம், வாழ்க்கை மற்றும் சமூகம் உண்டு. என் மனைவிக்கு நான் பாதுகாவலனாக இருக்க முடியாது’ என்றார்.

இதையடுத்து ஹாதியா சேலத்தில் உள்ள சிவராஜ் மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவ படிப்பை தொடர உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த கல்லூரியின் முதல்வர் ஹாதியாவின் பாதுகாவலராக இருப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் ஹாதியாவை கேரள போலீஸார் சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x