Published : 19 Jul 2023 06:34 PM
Last Updated : 19 Jul 2023 06:34 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திலேயே நாளை (வியாழக்கிழமை) கூட உள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை கூட உள்ள நிலையில், அது பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடுமா அல்லது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடுமா என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில்தான் தொடங்க உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு பேட்டி அளித்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், "மழைக்கால கூட்டத் தொடர் எந்த நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடக்க இருக்கிறது என்பது தொடர்பாக ஊடகங்களில் மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நாளை கூடவுள்ள மழைக்கால கூட்டத் தொடர் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில்தான் கூட உள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும், பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அது எப்போது முடியும் என்பது குறித்து அரசு தரப்பில் இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
மழைக்கால கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கினாலும், தொடர் முடிவடைவதற்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் மாற்றம் செய்யப்பட்டுவிடும் என்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தொடர் முடிவடைவதற்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணிகள் முடிவடையுமா என்ற சந்தேகம் உள்ளது. ஒருவேளை அவ்வாறு முடிவடையாமல் போனால், இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதுமே பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில்தான் நடக்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT