Published : 19 Jul 2023 04:30 PM
Last Updated : 19 Jul 2023 04:30 PM

மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்: மத்திய அரசு

அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் இன்று அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "மழைக்கால கூட்டத் தொடரில் விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட மற்றும் சபாநாயகரால் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

குறிப்பாக, எதிர்க்கட்சிகளால் அடிக்கடி எழுப்பப்படும் மணிப்பூர் விவகாரம் குறித்தும் அரசு விவாதிக்கத் தயார். இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்கள் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, சபாநாயகர் ஓம் பிர்லா விடுத்த அழைப்பின் பேரில் நடைபெற்ற வணிக ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரஹலாத் ஜோஷி, அப்போதும், மணிப்பூர் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "வரக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முதலில் எழுப்புவோம். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அரசு எத்தகைய வியூகத்தைக் கொண்டிருக்கிறது என்பது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.

இரண்டாவதாக, ஜனநாயகபூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் மீது மத்திய அரசால், மோடி அரசால் தொடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்புவோம். ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களைக் கொண்டும், அவசரச் சட்டங்கள் மூலமாகவும் மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு தமிழகம் போன்ற மாநிலங்களில் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை மேல் சோதனை நடத்தப்படுவது குறித்தும், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்ட விதம் குறித்தும் நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். தற்போதைய மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்து நிச்சயம் கேள்வி எழுப்புவோம்.

மூன்றாவதாக, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையேற்றம் குறித்து கேள்வி எழுப்புவோம். விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறது. ஆனால், விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதோடு, சிறு குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள், வேலை இழப்புகள் குறித்து எழுப்போம்" என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x