Published : 19 Jul 2023 03:33 PM
Last Updated : 19 Jul 2023 03:33 PM

உத்தராகண்ட் | நமாமி கங்கை திட்டப் பகுதியில் மின்மாற்றி வெடித்து 16 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்ட மாநிலம் அலக்நந்தா ஆற்றின் கரையில் மின்மாற்றி வெடித்து அங்குள்ள பாலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒரு போலீஸ் உதவி ஆய்வாளர், மூன்று ஊர்க்காவலர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தராகண்டின் சாமோலி மாவட்டம், பிபால்கோட்டி கிராமத்திலுள்ள அலக்நந்தா நதியைக் கடந்து செல்லும் இந்தப் பாலம், நமாமி கங்கை சுத்திகரிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாகும். செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த இந்த சோக சம்பவம் குறித்து சாமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேந்தர தோபால் கூறுகையில், "ஒரு காவலர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது, விசாரணைக்காக நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது 22 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்திருந்தனர். அதில் 15 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மற்றவர்களின் நிலைமை மோசமாக உள்ளது" என்றார்.

விபத்து குறித்து ஏடிஜிபி கூறுகையில், "ஒரு போலீஸ் அதிகாரி, மூன்று ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 15 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. முதல்கட்ட விசாரணையில், பாலத்தில் மின்னோட்டம் இருந்ததாக தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில் மேலும் கூடுதல் தகவல்கள் தெரியவரும்" என்றார்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர், "சாமோலியில் மின்சாரம் தாக்கி பலர் உயிரிழந்துள்ளதாக வந்துள்ள செய்தி மிகவும் வேதனையைத் தருகிறது. இந்த விபத்து குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன். மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

காயமடைந்த ஏழு பேரும் தற்போது ஹெலிகாப்டர் மூலமாக ரிஷிகந்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நமாமி கங்கை திட்டம் என்பது கங்கையை பாதுகாக்கவும், புத்துயிர் அளிக்கவும் முற்படும் ஓர் ஒருங்கிணைந்த பாதுக்காப்பு திட்டமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x