Published : 19 Jul 2023 01:32 PM
Last Updated : 19 Jul 2023 01:32 PM

மணிப்பூர் பிரச்சினை, தமிழக அமைச்சர்கள் மீதான விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: காங்கிரஸ்

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப் படம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரத்தையே முதலில் எழுப்புவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது: "வரக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முதலில் எழுப்புவோம். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அரசு எத்தகைய வியூகத்தைக் கொண்டிருக்கிறது என்பது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.

இரண்டாவதாக, ஜனநாயகபூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் மீது மத்திய அரசால், மோடி அரசால் தொடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்புவோம். ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களைக் கொண்டும், அவசரச் சட்டங்கள் மூலமாகவும் மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு தமிழகம் போன்ற மாநிலங்களில் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை மேல் சோதனை நடத்தப்படுவது குறித்தும், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்ட விதம் குறித்தும் நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். தற்போதைய மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்து நிச்சயம் கேள்வி எழுப்புவோம்.

மூன்றாவதாக, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையேற்றம் குறித்து கேள்வி எழுப்புவோம். விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறது. ஆனால், விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதோடு, சிறு குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள், வேலை இழப்புகள் குறித்து எழுப்போம்.

கடந்த ஜூன் மாதம் சீனாவுக்கு பிரதமர் மோடி நற்சான்றிதழ் கொடுத்த விவகாரம், அதானி ஊழல் விவகாரம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை விவகாரம், மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள வன பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா, டெல்லி அரசு அதிகாரம் தொடர்பான மசோதா ஆகியவற்றை நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம்.

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசின் பதிலைப் பொறுத்தே எங்கள் எதிர்வினை இருக்கும். ஆனால், இதற்கு முன் அரசு அதானி விவகாரம் குறித்தோ, சீனா விவகாரம் குறித்தோ விவாதிக்க முன்வரவில்லை" என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை 20) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் பெரும் பரபரப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x