Published : 19 Jul 2023 12:38 PM
Last Updated : 19 Jul 2023 12:38 PM

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கவுதம் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் முழங்கியதால் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது கவனிக்கத்தக்கது.

அதானி எண்டர்பிரைசஸின் 31-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, "எங்கள் குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே ஹிண்டன்பர்க் அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தச் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை 20) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் பெரும் பரபரப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. விலைவாசி உயர்வு, மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன எனும் குற்றச்சாட்டு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை இந்தக் கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டமே இது. முன்னதாக நேற்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். ஆனால், பெரும்பாலான கட்சியினர் பெங்களூரு, டெல்லி கூட்டங்களுக்குப் பிரிந்து சென்றதால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமைச்சரவை சகாக்கள் பிரஹலாத் ஜோசி, பியூஷ் கோயல் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த சந்திப்பும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதே தொடர்பாகவே நடந்ததாகத் தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டமும் இன்று நடைபெறவிருக்கிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றத்தில் கூடுமா அல்லது பழைய நாடாளுமன்றத்தில் கூடுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடும் என்றும் கூட்டத்தொடரின் இடையே புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு மாற்றிக்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டத்தொடர் குறித்தே அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x