Published : 19 Jul 2023 11:07 AM
Last Updated : 19 Jul 2023 11:07 AM

'இண்டியா' கூட்டணியும், ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையும்: பெயருக்குப் பின்னால் சில ‘சம்பவங்கள்’

பெங்களூரு: பாஜகவுக்கு எதிராக பெங்களூருவில் கூடிய 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இண்டியா’ (INDIA) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற 26 கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'இண்டியா' என்றால் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்று அர்த்தம். 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி என்ற பிரச்சாரத்துடன் 'இண்டியா' கூட்டணியை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

பெயர் உருவான பின்புலம்: 'இண்டியா' என்ற பெயர் செவ்வாய்க்கிழமை நடந்த 2-ஆம் நாள் கூட்டத்துக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் கூட அந்தப் பெயர் அதற்கு முன்னதாகவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. இந்தப் பெயரை யார் முதலில் பரிந்துரைத்தது என்பது பற்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் ரகசியம் காக்கின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை அளித்த விருந்து நிகழ்ச்சியில் சில தலைவர்கள் சேர்ந்து இந்தப் பெயரை இறுதி செய்ததாகத் தெரிகிறது.

பாரத் ஜோடா யாத்திரையின் பிரதிபலிப்பு: கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை (Bharat Jodo Yatra) மேற்கொண்டார். அப்போது அவர் இரண்டு இந்தியாக்கள் இடையேயான வித்தியாசம் பற்றி மக்கள் மத்தியில் பேசினார். அதனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான பெயரில் இந்த சாராம்சம் எதிரொலிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியதாகத் தெரிகிறது.

பாஜக எதற்கெடுத்தாலும் தேசியவாதம் பேசும் சூழலில், அந்தக் கருத்தியலுக்கு சொந்தம் கொண்டாட முயற்சிக்கும் சூழலில், காங்கிரஸ் 'இண்டியா' என்ற பெயரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்ய ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 'இண்டியா' என்ற பெயரை ஆலோசனைக் கூட்டத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்மொழிய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாஜகவின் நாட்டுப்பற்று, தேசியவாத உரிமை கொண்டாடலை வலுவாக எதிர்க்கும் பெயராக 'இண்டியா' அமையும் என்று தேர்தல் அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.

மற்ற 3 ஆப்ஷன்கள்... - 'இண்டியா' என்ற பெயரைத் தவிர முற்போக்கு மக்கள் கூட்டணி (Progressive People’s Alliance), இந்திய மக்கள் முன்னணி (Indian People’s Front), இந்தியாவுக்கான மக்கள் கூட்டணி (People’s Alliance for India) போன்ற பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது..

முன்மொழிந்த மம்தா - இரண்டாவது நாளாக நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடக்கவுரை ஆற்றினார். அதன்பின்னர் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்ருமான மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவரே 'இண்டியா' என்ற பெயரை முன்மொழிந்தார் என்று கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனை முன்மொழிந்த பின்னர் பேசிய மம்தா, "போட்டி என்பது பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயானது அல்ல; பாஜகவுக்கும் இதர இந்தியாவுக்கும் இடையேயானது" என்று கூறியுள்ளார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எல்லோருமே இணைந்து ஒருமனதாக 'இண்டியா' என்ற பெயரை முடிவு செய்ததாக கார்கே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இண்டியாவை எதிர்த்த நிதிஷ் குமார்: 'இண்டியா' என்ற பெயரை எதிர்க்கட்சிகள் அணிக்கு சூட்ட ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. அதேபோல் D என்ற எழுத்துக்கு ஜனநாயகம் என்ற பொருள்பட வைக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Indian Main Front இந்தியன் மெயின் ப்ரண்ட் என்ற பெயரையே எதிர்க்கட்சிக்ளின் கூட்டணிக்கு சூட வேண்டும் என்றும் நிதிஷ் பரிந்துரைத்துள்ளார்.

விசிகவின் பரிந்துரை: விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சேவ் இந்தியா அலையன்ஸ் அல்லது செக்குலர் இந்தியா அலையன்ஸ் என்ற பெயரை பரிந்துரைத்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரை சூட்டலாம் என்று பரிந்துரைத்தார்.

யெச்சூரி முன்வைத்த வாதம்: 'இண்டியா' என்பதன் விரிவாக்கம் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்று உள்ள நிலையில், கூட்டணி என்ற வார்த்தை வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விவாதித்துள்ளார். இது குறித்து அவர், "அலையன்ஸ் என்ற வார்த்தையப் பயன்படுத்துவது சரியாக இருக்காது.

காரணம், சில மாநிலங்களில் இங்கே ஒன்றாக உள்ள நாம் எதிரெதிர் கட்சிகளாக இருக்கிறோம். கேரளாவில் காங்கிரஸை இடதுசாரிகள் எதிர்த்துப் போட்டியிடும். அப்படியிருக்க, ‘கூட்டணி’ என்ற பதத்தைப் பயன்படுத்தினால், அது கேலிக்கூத்தாக இருக்கும்” என்றார். ஆகையால் எதிர்க்கட்சிகள் “V4People” ’மக்களுக்காக நாங்கள்’ என்ற பெயரை பயன்படுத்தலாம் என்றார். ஆனால், இதனை நிறைய கட்சிகள் நிராகரித்தன. இது கட்சிப் பெயர் போல் இல்லாமல் பிரச்சார முழக்கம் போல் இருப்பதாகக் கூறினர்.

ராகுல் பேசியது என்ன? - கூட்டத்தில் ராகுல் காந்தி 'இண்டியா' என்ற பெயரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று அழுத்தமான வாதத்தை முன்வைத்துள்ளார். பாஜக தேசியவாதத்தை சொந்தம் கொண்டாடுவதைத் தவிர்த்து, அதனை நாம் கைப்பற்ற வேண்டும் என்றால் 'இண்டியா' என்ற பெயரை கூட்டணிக்கு சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆதரித்த ஆம் ஆத்மி, சிவ சேனா: ஆம் ஆத்மி 'இண்டியா' என்ற பெயரை ஆமோதித்தது. சிவ சேனா உத்தவ் பால் தாக்கரே பிரிவுத் தலைவர் உத்தவ் தாக்கரேவும் ஆமோதித்தார். "பெயரில் என்ன இருக்கிறது. நாம் எதனை எதிர்த்து போட்டியிடுகிறோம் என்பது தான் முக்கியம்" என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த இன்னொரு நபர், "மோடிக்கு எதிராக யார் என்ற கேள்வி இதுவரை இருந்தது. இப்போது மோடிக்கு எதிராக ‘இண்டியா’ என்பது உறுதியாகிவிட்டது" என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறாக ‘இண்டியா’ என்ற கூட்டணி பெயர் பல்வேறு ஆலோசனைகள், ஆதரவுகள், விவாதங்களுக்கு இடையே இறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x