Published : 19 Jul 2023 06:51 AM
Last Updated : 19 Jul 2023 06:51 AM

எதிர்க்கட்சியினருக்கு குடும்பம்தான் முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருடன் பிரதமர் மோடி

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளுக்கு குடும்பம்தான் முக்கியம், நாட்டைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை என எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

அந்தமான் நிகோபார் தீவுகள் தலைநகர் போர்ட்பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களுக்காக செயல்படுவதுதான் ஜனநாயகம். ஆனால், வாரிசு அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, குடும்பத்தால், குடும்பத்துக்காக என்ற கொள்கையில் செயல்படுகின்றன. குடும்பம்தான் முக்கியம், நாட்டைப் பற்றி கவலை இல்லை என்பதுதான் அவர்களுடைய நோக்கம். நாட்டு நலனைவிட சொந்த நலன்தான் அவர்களுக்கு முக்கியம்.

பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்துகின்றனர். இது ஊழலை ஊக்குவிப்பதற்கான கூட்டம் என பொதுமக்கள் கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நாட்டு மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். ஆகையால் நாட்டின் அவல நிலைக்கு காரணமானவர்கள் தங்கள் கடைகளை திறந்துள்ளனர். அவர்கள் வேறு சில பாடலை பாடலாம். ஆனால், உண்மை நிலை வேறாக உள்ளது. வேறு ஒருவருடைய தயாரிப்பின் மீது இவர்கள் தங்கள் லேபிளை ஒட்டி வைத்துள்ளனர்.

இவர்களுடைய கடைகளில் சாதியவாதம் மற்றும் மிகப்பெரிய ஊழல் என்ற விஷத்துக்கு உத்தரவாதம் உள்ளது. அவர்கள் இப்போது பெங்களூருவில் கூடியிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ஜாமீனில் இருப்பவருக்கு அங்கு மிகப்பெரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் முழுவதும் ஜாமீனில் இருந்தால், அவர்கள் அதிக அளவில் கவுரவிக்கப்படுகிறார்கள். ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தியதால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரும் கவுரவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக ஆலோசனை மேற்கொண்டனர். இதை மனதில் வைத்துதான் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x