Published : 19 Jul 2023 03:55 AM
Last Updated : 19 Jul 2023 03:55 AM
பெங்களூரு: பாஜகவுக்கு எதிராக பெங்களூருவில் கூடிய 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு தலைவர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23-ம் தேதி பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதை தொடர்ந்து பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன.
பெங்களூருவில் உள்ள தாஜ் வெஸ்ட் என்ட் நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு 2-வது நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆர்ஜேடி மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் தலைவர்கள் எழுந்து நின்று, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த புதிய கூட்டணிக்கு 'முன்னணி' என முடியும் வகையில் பெயர் சூட்டலாம் என இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூறினர். அதற்கு மம்தா பானர்ஜி, கூட்டணியின் பெயரில் 'இந்தியா' என வர வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்க, ராகுல் காந்தி ‘இண்டியா' (INDIA - Indian National Developmental Inclusive Alliance) என்ற பெயரை வைக்கலாம் என தெரிவித்தார். இதற்கு பெரும்பான்மையான கட்சி தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
பின்னர் நடந்த ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘‘இக்கூட்டத்தில் 7 மாநில முதல்வர்கள் உட்பட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு இந்த கூட்டணியை வழிநடத்தும்’’ என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது: ‘இண்டியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தற்போது அமைக்கப்படவில்லை. மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் அந்த குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். கூட்டணி தலைவர், ஒருங்கிணைப்பாளர் யார் என்பதெல்லாம் சாதாரண விஷயம். அதை இன்னும் தீர்மானிக்கவில்லை.
காங்கிரஸுக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இந்த கூட்டணியை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அதனாலேயே, அவசரமாக 30-க்கும் மேற்பட்ட கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார். எனது 52 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் இந்த அளவுக்கு நசுக்கப்பட்டு பார்த்தது இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT