Published : 19 Jul 2023 04:19 AM
Last Updated : 19 Jul 2023 04:19 AM

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (79) பெங்களூரு மருத்துவமனையில் நேற்று காலமானார்.

கடந்த 1943-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி கேரளாவின் கோட்டயம் மாவட்டம், புதுப்பள்ளியில் உம்மன் சாண்டி பிறந்தார். கல்லூரி காலத்தில் காங்கிரஸில் இணைந்த அவர், கடந்த 1970-ல் புதுப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அதே தொகுதியில் 12 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 4 முறை அமைச்சராகப் பதவி வகித்தார். கடந்த 2004-ம் ஆண்டில் முதல்முறையாக கேரள முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் 2011-ல் 2-வது முறையாக முதல்வர் பதவியேற்று 2016-ம் ஆண்டு வரை பதவியில் நீடித்தார்.

கடந்த 2019-ல் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் ஜெர்மனியில் அவர் சிகிச்சை பெற்றார். பின்னர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு இடையே அவர்கள் பெங்களூருவில் உம்மன் சாண்டி உடலுக்கு மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் உம்மன் சாண்டியின் உடல் நேற்று திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரம் செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக உடல் வைக்கப்பட்டது. பின்னர் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், உம்மன் சாண்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்துக்கு அவரது உடல் இன்று வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. மறைந்த தலைவர் உம்மன் சாண்டிக்கு மேரியம்மா என்ற மனைவியும் அச்சு, மரியா ஆகிய இரு மகள்களும் சாண்டி என்ற மகனும் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எளிமையான, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தலைவரை நாம் இழந்து விட்டோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உம்மன் சாண்டியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரள அரசு சார்பில் நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாநில அரசு சார்பில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x