Published : 18 Jul 2023 07:08 PM
Last Updated : 18 Jul 2023 07:08 PM

தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை செயல்படுத்தி வருகிறோம்: சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி

சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி (வலது), பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி (இடது)

சென்னை: தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை சென்னை ஐஐடி செயல்படுத்தி வருவதாக அதன் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி உள்ளிட்டோர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பை அடுத்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 'அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்', பி.எஸ். பட்டப்படிப்பு (டேட்டா சயின்ஸ்), இடைநிலை இரட்டைப் பட்டப்படிப்பு (IDDD) ஆகியவற்றின் மூலம் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் முக்கிய அம்சங்களை செயல்படுத்தியிருக்கிறது.

பலகட்ட நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்கள், பாடத்திட்ட மாற்றத்தை வழங்குதல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான மானுட நிபுணத்துவத்தை செயல்படுத்திக் காட்டுதல் போன்றவை இத்திட்டத்தின் தனித்துவ அம்சங்களாகும். மத்திய உயர் கல்வி நிறுவனப் பிரிவின்கீழ் அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் போர்ட்டலில் (https://www.abc.gov.in/) ஐஐடி மெட்ராஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ்-ஐச் சார்ந்த 491 மாணவர்கள் இதில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஊரக கலந்தாலோசனை மையம்: ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் கூட்டு முயற்சியின் வாயிலாக கிராமங்களில் ஊரக கலந்தாலோசனை மையங்களை (RICs) நிறுவத் தொடங்கியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த ஆசிரியர்களை அழைத்து வருவதில் இது கவனம் செலுத்துகிறது. ஸ்மார்ட் டிவி, இணைய வசதிகளுடன் கிராமக் கல்வி மையங்கள் நிறுவப்படுகின்றன. 8, 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஊரக கலந்தாலோசனை மையங்கள் சேவையாற்றுகின்றன. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நேரடி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் தாய்மொழியில் அறிவியல், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களைக் கற்பிக்கின்றனர்.

தமிழகத்தில் 89 கிராமங்களும், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் 100 கிராமங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றன. 189 ஊரக மையங்கள் மூலம் 12,000 மாணவர்கள் இப்பாடத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

ஊரகத் தொழில்நுட்ப மையம்: மற்றொரு முக்கிய முயற்சியாக, 'அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்' திட்டத்தின்கீழ், ASHA அமைப்பின் கூட்டாண்மையுடன், தமிழகத்தில் தொலைதூர மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியலை பயிற்றுவிக்கும் விதமாக ஊரகத் தொழில்நுட்ப மையத்தை ஐஐடி மெட்ராஸ் நிறுவியுள்ளது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் தொழில்நுட்ப அறிவையும், அதன் பயன்களையும் இந்த மையங்கள் பரப்பி வருகின்றன. ஊரகத் தொழில்நுட்ப மையம் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை வழங்குகிறது. டிஜிட்டல் கல்வியறிவுத் திறன் மற்றும் கணக்கீட்டு சிந்தனைத் திறன் ஆகிய இரண்டையும் வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப பயன்பாட்டை குழந்தைகளுக்கு எளிதாக்குவதுதான் இந்த மையங்களின் இலக்காகும்.

இக்கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "மாணவர்களிடையே படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தொழில் முனைவு மனநிலையை ஊக்குவிப்பதும், புதுமையை வளர்ப்பதும் தரமான கல்வியின் இரு தூண்கள் என்பதை புதிய கல்விக் கொள்கை அங்கீகரிக்கிறது. புத்தாக்க மையம் (CFI), நிர்மாண் ஆகியவை தேசிய கல்விக் கொள்கையின் குறிக்கோளுடன் ஒத்துப் போகின்றன. படைப்பாற்றலை வளர்த்தல், சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துதல், நிஜ உலக சவால்களை எதிர்கொள்ளும் ஸ்டார்ட் அப்களை வளர்த்தல் மற்றும் சமூக நலனுக்கு பங்களிப்பை வழங்குதல் ஆகியவற்றிலும் தேசிய கல்விக் கொள்கையை ஒத்துப் போகின்றன" எனக் குறிப்பிட்டார்.

புத்தாக்க மையம் மற்றும் நிர்மாண்: மாணவர்களிடையே படைப்பாற்றல் மற்றும் தொழில் முனைவு உணர்வை வளர்ப்பதற்கு ஐஐடி மெட்ராஸ் பல வழிகளை உருவாக்கியுள்ளது. புத்தாக்க மையம்(CFI) மற்றும் நிர்மாண் ப்ரி-இன்குபேட்டர் ஆகியவை இதில் அடங்கும். இளம் வயதினரிடையே புதுமை, தொழில்முனைவு ஆகியவற்றை வளர்க்க இவை உறுதிபூண்டுள்ளன. புத்தாக்க மையமானது ஆக்கப்பூர்வ சிந்தனைக்கான மையமாக செயல்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான வளங்கள், உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்களிடம் இருந்து அவர்களின் புதுமையான கருத்துக்களைத் தொடர போதிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. தற்போதைய உலக சூழலில் பலதரப்பட்ட கற்றல், பரிசோதனை மற்றும் அறிவைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கூட்டுச்சூழலை நாங்கள் வழங்கி வருகிறோம்.

அதேபோன்று, தொழில் முனைவோருக்கு வணிகம் தொடர்பான சிந்தனைகளை உருவாக்கவும், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியாக லாபம் ஈட்டும் நுணுக்கத்தையும் நிர்மாண் வழங்கி வருகிறது. வழிகாட்டுதல்கள், பட்டறைகள், தொடக்க நிதி, தொழில்துறை நிபுணர்களை அணுகச் செய்தல் ஆகியவற்றின் மூலம் இக்கல்வி நிறுவனம் மாணவர்களிடையே தொழில்முனைவுப் பயணத்தில் வழிகாட்டியாகத் திகழ்கிறது. சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துதல், நிஜ உலக சவால்களை எதிர்கொள்ளுதல், சமூக நலனுக்கு பங்களிக்கும் ஸ்டார்ட்-அப்களை வளர்த்தல் ஆகியவை புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்துடன் ஒத்துப் போவதாக அமைந்துள்ளன.

பிஎஸ் (டேட்டா சயின்ஸ் மற்றும் புரோகிராமிங்): ஐஐடி மெட்ராஸ் பட்டப்படிப்பு திட்டத்தில் நான்கு நிலைகள் உள்ளன. ஐஐடி மெட்ராஸில் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் ஒருவர் பிஎஸ் பட்டம் பெற நான்கு நிலைகளையும் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். எந்த நிலையிலும் வெளியேறும் நெகிழ்வுத் தன்மையும் உண்டு. கற்று முடித்த பாடத்திட்டங்கள், கிடைக்கப் பெற்ற திறன்கள் ஆகியவற்றைப் பொறுத்து, ஐஐடி மெட்ராஸ்-ன் ஐஐடிஎம் கோடு (Centre for Outreach and Digital Education) எனப்படும் அடிப்படை சான்றிதழோ, ஐஐடி மெட்ராஸ்-ன் டிப்ளமோ சான்றிதழோ பெற முடியும். அதேபோன்று ஐஐடி மெட்ராஸ்-ல் இருந்து புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்சில் பி.எஸ்சி பட்டமோ, ஐஐடி மெட்ராஸ்-ல் இருந்து டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்சில் பிஎஸ் பட்டமோ பெற முடியும்.

இடைநிலை இரட்டை பட்டப்படிப்பு திட்டம்: தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் வளர்ந்துவரும் தேவைகளைத் தக்க வைக்கும் வகையில், 2018-ம் ஆண்டில் இடைநிலை இரட்டை பட்டப் படிப்பு (Interdisciplinary Dual Degree - IDDD) என்ற பாடத்திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியது. IDDD யுடன் மாணவர்கள் இணைந்து இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் தொழில்நுட்பத்தின் புதிய பகுதிகள், அவற்றின் போக்குகளை கற்றுணர முடியும். இந்தப் படிப்புகள் ஐஐடி மெட்ராஸ்-ன் IDDD பிரிவில் ஐந்தாண்டு பாடத் திட்டங்களில் இடம்பெற்றவையாகும். இந்த பாடத்திட்டங்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள பல்துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, ஐஐடி மெட்ராஸ் மொத்தம் 14 இடைநிலை இரட்டைப் பட்டங்களை (IDDD) அளித்து வருகிறது. அவை வருமாறு:

1. அட்வான்ஸ்ட் மெட்டீரியல்ஸ் அண்ட் நானோ டெக்னாலஜி

2. காம்பக்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டைனமிக்ஸ்

3. பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்

4. கம்ப்யூட்டேஷனல் இன்ஜினியரிங்

5. அட்மாஸ்பரிக் அண்ட் கிளைமேட் சயின்சஸ்

6. சைபர்- பிசிக்கல் சிஸ்டம்ஸ்

7. டேட்டா சயின்ஸ்

8. எலெக்ட்ரிக் வெஹிகில்ஸ்

9. எனர்ஜி சிஸ்டம்ஸ்

10. ரோபோடிக்ஸ்

11. குவாண்டம் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

12. குவாண்டிடேடிவ் ஃபைனான்ஸ்

13. பப்ளிக் பாலிசி

14. டெக் எம்பிஏ (7.5 சிஜிபிஏ அல்லது அதற்கும் அதிகமாக கருதப்படுகிறது)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x