Published : 18 Jul 2023 04:28 PM
Last Updated : 18 Jul 2023 04:28 PM
பெங்களூரு: வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு ஏற்கெனவே இருந்த யுபிஏ (UPA) ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயருக்குப் பதிலாக புதிய பெயர்களை பரிந்துரைக்க திங்கள்கிழமை நடந்த இரவு விருந்தில் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடந்த 4 புதிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம்: I - Indian, N - National, D - Democratic, I - Inclusive, A - Alliance. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி.
எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்துக்குப் பின்னர் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "இது, நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றுதற்கான மிகவும் முக்கியமான ஒரு கூட்டம். நாட்டின் நலன் கருதி நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றிணைந்துள்ளோம்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பல்வேறு விவகாரங்களை விவாதித்து ஒருமித்த குரலில் தீர்மானங்களை ஆதரித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கூட்டணிக்கு இந்தப் பெயரை வைக்க ஒப்புக்கொண்டனர். முதலில் எங்களுடைய கூட்டணி யுபிஏ (UPA) ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்பட்டது.
தற்போது 26 கட்சிகளும் ஒருங்கிணைந்து வழங்கியுள்ள பெயர், ‘இந்தியா’. Indian National Democratic Inclusive Alliance.அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி.
அடுத்தக் கூட்டம்: எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் மும்பையில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதேபோல் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்களின் பெயர்கள் மும்பையில் அறிவிக்கப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணி 30 கட்சிகளுடன் கூட்டம் நடத்துகிறது. அதில், பல கட்சிகளை நான் இந்தியாவில் கேள்விப்பட்டதே இல்லை. இதற்கு முன்பு அவர்கள் கூட்டம் எதுவும் நடத்தவில்லை. ஆனால், இப்போது ஒவ்வொருவராக சந்தித்துக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். நாங்கள் இங்கு ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றவே ஒன்று கூடியுள்ளோம்.
இன்று ஒட்டுமொத்த ஊடகங்களும் பிரதமர் மோடியால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களின் சமிக்ஞை இல்லாமல் யாரும் அசைவது கூட இல்லை. என்னுடைய 52 வருட அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல்கள் இந்த அளவுக்கு ஒடுக்கப்பட்டு பார்த்தது இல்லை” என்று அவர் பேசினார்.
பிரதமர் பதவி... - இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”சென்னையில் நடந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிலேயே காங்கிரஸுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை. பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். காங்கிரஸின் விருப்பம் எல்லாம் அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியைப் பேணுவது மட்டுமே.
மாநில அளவில் நம்மில் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தது அல்ல. மேலும், அந்த வேறுபாடுகள் பெரியதும் அல்ல. ஆகையால் சாமானிய மக்களின் நலனுக்காக, நடுத்தர வர்க்க மக்களுக்காக, இளைஞர்களுக்காக, ஏழைகளுக்காக, பட்டியலின மக்களுக்காக, பழங்குடியினருக்காக, சிறுபான்மையினருக்காக, திரைமறைவில் நசுக்கப்படும் அவர்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக நாம் ஒன்றிணைவோம்" என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகம் யார் என்ற கேள்வி இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றிய அறிவிப்புகள் வெளியான நாள் முதலே விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் நரேந்திர மோடியே இருப்பார் என்பதை பல தருணங்களிலும் பாஜக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...