Published : 18 Jul 2023 01:19 PM
Last Updated : 18 Jul 2023 01:19 PM
பெங்களூரு: பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று (ஜூலை 18) நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியோ அல்லது அதிகாரமோ முக்கியமல்ல என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் இன்று (ஜூலை 18) இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”சென்னையில் நடந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிலேயே காங்கிரஸுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை. பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். காங்கிரஸின் விருப்பம் எல்லாம் அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியைப் பேணுவது மட்டுமே.
மாநில அளவில் நம்மில் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தது அல்ல. மேலும், அந்த வேறுபாடுகள் பெரியதும் அல்ல. ஆகையால் சாமானிய மக்களின் நலனுக்காக, நடுத்தர வர்க்க மக்களுக்காக, இளைஞர்களுக்காக, ஏழைகளுக்காக, பட்டியலின மக்களுக்காக, பழங்குடியினருக்காக, சிறுபான்மையினருக்காக, திரைமறைவில் நசுக்கப்படும் அவர்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக நாம் ஒன்றிணைவோம்" என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகம் யார் என்ற கேள்வி இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றிய அறிவிப்புகள் வெளியான நாள் முதலே விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் நரேந்திர மோடியே இருப்பார் என்பதை பல தருணங்களிலும் பாஜக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2024 மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்த தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், "2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். ஆனால், அதற்காக அந்த அணி காங்கிரஸ் தலைமையிலான அணியாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்று கருத்து கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. | வாசிக்க > எதிர்க்கட்சிகள் கூட்டம் @ பெங்களூரு | யுபிஏ-க்கு மாற்றாக 4 பெயர்கள் பரிந்துரை: சோனியா காந்தி இறுதி முடிவு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT