Published : 13 Nov 2017 08:52 AM
Last Updated : 13 Nov 2017 08:52 AM
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கிருஷ்ணா நதியில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதில் 14 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 6 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் தினந்தோறும் மாலையில் நதிக்கு பவித்ர ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது. நேற்று மாலை பவித்ர ஹாரத்தியை காண பவுர்ணமி கரை, பவானி கரையிலிருந்து ஆந்திர மாநில சுற்றுலாத் துறையினர் ஏற்பாடு செய்துள்ள விசைப்படகுகள் மூலம் இப்ரஹிம் பட்டினம் ஃபெர்ரி எனும் இடத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்றனர்.
அப்போது சிறிது தூரம் சென்றவுடன் 40 பயணிகளை ஏற்றிச்சென்ற ஒரு விசைப்படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் போலீஸார், மீனவர்கள், உள்ளூர்வாசிகள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்களில் 8 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள். இவர்களில் சிலர் ஓங்கோல், விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தண்ணீரில் தத்தளித்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 6 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மங்களகிரி பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சந்திரபாபு உத்தரவு
படகு விபத்து குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டனர். படகில் சென்றவர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கப்படவில்லை. இதுவே உயிரிழப்புக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT