Published : 18 Jul 2023 04:39 AM
Last Updated : 18 Jul 2023 04:39 AM
போர்ட் பிளேர்: அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
அந்தமான்-நிகோபர் யூனியன் பிரதேச தலைநகர் போர்ட் பிளேரில் வீர சாவர்கர் விமான நிலையம் அமைந்துள்ளது. இது 6,100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டில் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் ரூ.707 கோடி செலவில் 40,837 சதுர மீட்டர் பரப்பில் புதிய பன்னாட்டு முனையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 2022 அக்டோபரில் புதிய முனையத்தை திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் நிறைவு பெற்று ஒருங்கிணைந்த வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்த புதிய முனையம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாகும். ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்த முடியும். இயற்கையை பிரதிபலிக்கும் வகையில் சிப்பி வடிவில் முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும், பகல் நேரங்களில் மின் விளக்குப் பயன்பாட்டை குறைத்து சூரிய ஒளி வெளிச்சம் கிடைக்கும் வகையிலும் இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு வெப்பத்தைத் தடுப்பதற்கான சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திலேயே 100 சதவீதம் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான ஆலை கட்டப்பட்டுள்ளது. 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய விமான முனையம் அந்தமான் தீவின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும், சுற்றுலாவை மேம்படுத்தும், உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பெருக செய்யும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT