Published : 18 Jul 2023 05:10 AM
Last Updated : 18 Jul 2023 05:10 AM
இம்பால்: கிறிஸ்தவர்கள் மீது மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மைதேயி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என மணிப்பூர் மாநில அரசை வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ம் தேதி குகி, நாகா ஆகிய பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின.
ஆயிரக்கணக்கான கடைகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய வன்முறை காரணமாக இதுவரை 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசுதெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கு 50,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், மாநிலத்தில் நாள்தோறும் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வீடுகள் தீக்கிரை, ஆயுதங்கள் கொள்ளை, துப்பாக்கிச் சூடுசம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
டெல்லியில் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தைக் கண்டித்து நேற்று மணிப்பூரைச் சேர்ந்த மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் தலைவர்கள், நிர்வாகிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், மணிப்பூர் கலவரத்துக்கு மத நோக்கம் மட்டுமே காரணம் இல்லை என்றும், சட்டவிரோதமாக மாநிலத்தில் குடியேறியவர்களால்தான் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரச் சம்பவங்களுக்கு மத நோக்கம் மட்டுமே காரணமாக இல்லை. மணிப்பூரைச் சேர்ந்தவர்களுக்கும், சட்டவிரோதமாக மணிப்பூரில் குடியேறியவர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் இது. இந்த மோதலால்தான் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது. சட்டவிரோதமாக குடியேறிய மக்கள்தான் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் அதிகமாக வசிக்கும் இனத்தவர் மட்டுமே, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. பல்வேறு இனத்தவரும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ இனத்தின் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை உலகுக்கு அறிவிக்கவே நாங்கள் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மைதேயி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ரோஹன்பிலேம் என்பவர் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்கள், எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பிரச்சினையைத் தீர்க்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT