Published : 03 Nov 2017 02:35 PM
Last Updated : 03 Nov 2017 02:35 PM
டிசம்பர் 30, 2016 இறுதிக்கெடுவைத் தாண்டி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 தாள்களை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
மனுதாரர்கள் சிலர் தங்களிடம் உள்ள பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை மீண்டும் டெபாசிட் செய்ய கால அளவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இறுதிக்கெடுவைத் தாண்டி மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார், ஆனால் இவர்கள் மனுவில் குறிப்பிடப்பட்ட அந்த நோட்டுகள் மீதான நடவடிக்கை இல்லை என்பதையும் அவர் கூடுதலாகத் தெரிவித்தார்.
மனுவில் குறிப்பிடாமல் மேலும் அவர்கள் வைத்திருக்கும் மதிப்பிழந்த நோட்டுகளுக்கு இந்த உத்தரவாதத்தை அவர்கள் கோர முடியாது என்றார்.
மகாராஷ்டிர மாநில விவசாயிகள், அயல்நாட்டு குடிமகன்கள், அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்டனர்.
இருப்பினும், பணமதிப்பு நீக்கச் சட்டம் இன்னும் அரசியல் சட்ட ரீதியாக செல்லுபடியாவதால், சட்டத்துக்கு எதிராக இடைக்கால நிவாரணம் அளிக்க இயலாது என்று மனுதாரர்களிடம் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையே செல்லுபடியாகக் கூடியதா என்ற வழக்கு அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் என்பதால் மனுதாரர்கள் தங்கள் குறைகளை அங்கு எடுத்து வைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரணவ் சச்தேவா, நாங்கள் ரூ.1 லட்சம் வரையிலான தொகையைத்தான் மீண்டும் ஆர்பிஐ-யிடம் செலுத்த விரும்புகிறோம், கோடிக்கணக்கில் அல்ல என்றார். மேலும் கடினமாக உழைத்துச் சேர்த்த பணத்தின் பலனை அடையமுடியாமல் உள்ளது, முன்கூட்டிய நோட்டீஸ் இல்லாமல் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஆனால் இறுதிக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அப்படி நீட்டித்தால் பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்தது. ஏற்கெனவே பல்வேறு அவுட்லெட்கள் மூலம் டெபாசிட் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவே டிசம்பர் 30, 2017 வரை இறுதிக்கெடுவை நீட்டிக்க தகுதியான காரணங்கள், அவசியமான காரணங்கள் இல்லை என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT