Published : 28 Nov 2017 11:05 AM
Last Updated : 28 Nov 2017 11:05 AM
ஆந்திராவில் வசிக்கும் திருநங்கைகளுக்கு விரைவில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். மேலும், ஏழை பெண்களின் திருமண காணிக்கை எனும் பெயரில் ஜனவரி 1-ம் தேதி முதல் உதவித் தொகை வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.
அமராவதியில் ஆந்திர மாநில குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த குளிர்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது. இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில் பல நூதன திட்டங்களை விரைவில் அமல்படுத்தப்போவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது: ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல், மாநிலத்தில் உள்ள பின் தங்கிய பிரிவினர், தலித் பிரிவினர், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்காக ‘திருமண காணிக்கை’ எனும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தகுதியானவர்களுக்கு திருமணத்திற்கு முன் 20 சதவீதமும், திருமண நாளன்று மீதமுள்ள 80 சதவீத பணமும் வழங்கப்படும். விரைவில் இவர்களுக்கு வழங்கப்படும் தொகை அறிவிக்கப்படும்.
மாநிலத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு விரைவில் மாதாமாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும். அரசு பள்ளிகளில் டிஜிட்டல் தொழில் நுட்ப கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே சந்திரண்ணா காப்பீடு திட்ட உறுப்பினர்களுக்கு இயற்கை மரணம் எய்தினாலும் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 2.53 கோடி மக்கள் பயனடைவர். வரும் 2018-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் ‘என்.டி.ஆர் கேன்டீன்’ திறக்கப்படும். தற்போது 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் விநியோகித்து வருகிறோம். பொதுமக்களின் நலன் கருதி மின்சார கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT