Published : 17 Jul 2023 01:32 PM
Last Updated : 17 Jul 2023 01:32 PM
புதுடெல்லி: கடந்த ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் அடுத்த ஒரு மாதத்திற்குள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்களை வகுக்க எதிர்கட்சிகள் இன்று மாலை பெங்களூருவில் கூடுகின்றன.
காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்தில் 24 கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட 15 கட்சிகளைவிட இந்த கூட்டத்தில் கூடுதலாக 9 கட்சிகள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்னாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, டெல்லி குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பங்கேற்பு குறித்து பல ஊகங்கள் நிலவி வந்தன. இந்தநிலையில், நீண்ட நாள்கள் நடந்த ஆலோசனைக்கு பின், பெங்களூரு கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பதாக அறிவித்தது. மத்திய அரசின் அவசரச் சட்டத்தினை காங்கிரஸ் எதிர்க்கும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி இதனைத் தெரிவித்திருந்தது.
முன்முடிவுகள் எதுவுமின்றி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முதல்கட்ட ஆலோசனைக்கானதாக மட்டும் பாட்னா கூட்டம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியுடனான சமரச அறிவிப்பினைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூடுகைக்கான தெளிவான பாதையை காங்கிரஸ் கட்சி அமைத்துக் கொடுத்துள்ளது. பாட்னா கூட்டம் ஒரு நாள் நடந்த நிலையில், பெங்களூரு கூட்டம் திங்கள், செவ்வாய் என இரண்டு நாட்கள் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை களைந்து, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் தகவல் தொடர்பு புள்ளிகளை உருவாக்குவதற்கான துணைவரைவுக்குழு குறித்து இதில் முன்மொழியப்படும் என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான பெயரினை வெளியிடவும் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு, மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணமூல் கட்சியின் வெற்றி போன்ற பின்னணியில் எதிர்க்கட்சிகளின் இந்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பெங்களூரு கூட்டம் கட்சிகளுக்கு இடையிலான இடப்பகிர்வு குறித்து பேச சரியான இடம் இல்லை என்று பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். தேசிய அளவிலான இடப்பகிர்வு குறித்து தலைவர்களிடம் எந்த எண்ணமும் இல்லாததால், இடப்பகிர்வு பிராந்திய அளவில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் அதுகுறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் இடப்பகிர்வு குறித்து பெங்களூரு கூட்டத்தில் விவாதிக்கப்படாது.
இந்தக் கூட்டம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரெக் ஓ பிரையான் கூறுகையில், "கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்த ஊகங்களில் எந்தவித அர்த்தமும் இல்லை. நோக்கம் தெளிவாக உள்ளது. நாம் தன்னலமின்றி ஒற்றுமையாக உழைத்து, தொலைநோக்குப் பார்வையுடன் 2024 மற்றும் அதற்கு பிறகான இந்தியாவை முன்வைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "எங்களின் நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதுதான். மத்திய அமைப்புகளின் தவறான பயன்பாடு, கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல், ஆளுநர்களின் பங்கு, பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை தேசிய அளவிலான பிரச்சாரங்களாகப் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பெங்களூரு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், திங்கள் கிழமை காலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சர்வாதிகாரம், வகுப்புவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வரும் தலைவர்களை வரவேற்று ட்வீட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த கூட்டம் குறித்து திங்கள்கிழமை நடந்த கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் பொதுசெயலாளர் கேசி வேணுகோபால், "நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க, நமது அரசியலமைப்பு உரிமைககள் மற்றும் அரசு அமைப்புகளின் உரிமைகளை பாதுகாத்திட நாங்கள் ஒரு பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம். தற்போதுள்ள பாஜக ஆட்சியில் இவை அனைத்தும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. அவர்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கப்பார்க்கிறார்கள். அதற்காக மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்தது, மகாராஷ்டிராவில் நடக்கும் சம்பவங்கள் அதற்கான உதாரணங்கள்" என்று தெரிவித்தார்.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், "நாட்டிலுள்ள சில கட்சிகளைத் தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒன்றுகூடியுள்ளன. இது எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கான கூட்டம் இல்லை. இது பல்வேறு பிரச்சினைகளால் தவிக்கும் நாட்டின் 140 கோடி மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இந்த புரிதலுடன் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். கர்நாடகா எங்களுக்கு ஆணையிட்டது போல, 2024ல் ஒட்டு மொத்த நாடும் ஆணையிடும் அந்த முடிவுகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்" என்றார்.
காங்கிரஸின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பின்னர், பிரதமர் மோடி அதிர்ச்சியில் உள்ளார். பாஜகவும் அதிர்ச்சியில் உள்ளது. பிரதமர் திடீரென என்டிஏ கூட்டணி பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளார். அதற்கு புதிய உயிர் கொடுக்க முயற்சிகள் நடக்கின்றன. நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்னா கூட்டத்தின் விளைவு இது" என்று கூறியுள்ளார்.
பெங்களூரு கூட்டத்தில், காங்கிரஸின் நாடளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி, என்சிபி தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமார், ஜார்கண்ட முதல்வர் ஹேமந்த் சோரன், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கே.சி. சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு மற்றும் நவீன் பட்னாயக் ஆகியோர் பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT