Published : 17 Jul 2023 12:05 PM
Last Updated : 17 Jul 2023 12:05 PM
புதுடெல்லி: டெல்லி, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரவலாக மழை பெய்த நிலையில் கங்கை ஆற்றில் வெள்ளம் அபாய எல்லையைத் தாண்டி பாய்கிறது. டெல்லியில் யமுனை ஆற்றில் மீண்டும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் இன்றும் உத்தராகண்ட் மாநிலத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உத்தராகண்ட் நிலவரம்: டேராடூன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று ஜூலை 17 உத்தராகண்ட் மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று பெய்த மழையால் நிறைய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ஜோசிமத் - மலார் சாலையை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. கிர்தி கங்கா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அது சேதமடைந்துள்ளது. பிதோர்கர் மாவட்டத்தில் உள்ள காளி ஆற்றிலும் வெள்ளம் 889 மீட்டர் என்ற அபாய எல்லையைக் கடந்து பாய்கிறது. கங்கை ஆற்றிலும் அபாய எல்லையைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.
யமுனை ஆற்றில் மீண்டும் உயரும் நீர்மட்டம்: டெல்லியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தின்படி மாநிலத்தில் 13.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று டெல்லியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரில் ஆங்காங்கே இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று பெய்த மழை காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 7 மணியளவில் நீர்மட்டம் 205.45 மீட்டர் என்றளவில் இருக்கிறது. 205.33 மீட்டர் என்பதுதான் அபாய எல்லை. அதையும் தாண்டி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. முன்னதாக, யமுனை ஆற்றில் வெள்ளம் வடிந்ததால் வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாறிய நிலையில் நேற்றைய மழையால் மீண்டும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் கேஜ்ரிவால் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT