Published : 29 Nov 2017 09:38 AM
Last Updated : 29 Nov 2017 09:38 AM

அனைத்து நாடுகளையும் விட தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது: சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இவாங்கா பாராட்டு

தொழில்நுட்பத்தில் இந்தியா அனைத்து நாடுகளையும் விட அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது என நேற்று ஹைதராபாத்தில் தொடங்கிய சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இவாங்கா டிரம்ப் புகழாரம் சூட்டினார்.

ஹைதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள எச்ஐசிசி வளாகத்தில் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் பேசியதாவது:

இந்த உச்சி மாநாட்டை அமெரிக்கா-இந்தியா நாடுகள் கூட்டாக நடத்துகிறது. இதற்கு 150 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களை நான் வரவேற்கிறேன். உலகில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியை அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தொழில் நுட்பத்தில் இந்தியா அனைத்து நாடுகளை விட வேகமாக முன்னேறி வருகிறது. புதுமைகளை வரவேற்கும் இந்திய இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியாவின் வானவியல் ஆராய்ச்சி சந்திரனையும் தாண்டி செவ்வாய் கிரகத்தை தொடும் அளவிற்கு முன்னேறி உள்ளது. தொழிலதிபர்கள் தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றுதல் அவசியம்.

இந்தியா, அமெரிக்காவிற்கு உண்மையான நண்பனென அடிக்கடி எனது தந்தையும் அமெரிக்க அதிபருமான டிரம்ப் கூறுவார். இவ்வளவு அழகான இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹைதராபாத் பிரியாணி உலக பிரசித்தி பெற்றதென நான் அறிவேன். இந்த முத்து நகரத்தில் இளைஞர்களே முதுகெலும்பு. நீங்கள் இரவும், பகலும் உழைத்து பல மொபைல் அப்ளிகேஷன்கள், ரோபோக்களை தயாரித்து வருகிறீர்கள். இந்த உச்சி மாநாட்டில் 52 சதவீதம் பேர் பெண் தொழிலதிபர்கள் பங்கேற்றிருப்பதில் நானும் பெருமிதப்படுகிறேன். ஆண்கள் ஆதிக்கமுள்ள இந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேற அதிகமாக கஷ்டப்பட வேண்டுமென்பதை நானும் உணர்கிறேன்.

உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழிலதிபர்கள் 10 சதவீதம் அதிகரித்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் ஒரு கோடியே 10 லட்சம் பெண் தொழிலதிபர்கள் உள்ளனர். சொந்த காலில் நிற்க வேண்டுமென நினைக்கும் பெண்கள் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம். ஒரு பெண் காலூன்றி விட்டால், அவரது வீடு, குடும்பம் மட்டுமின்றி அவர் சார்ந்த சமுதாயமும் வளர்ச்சி அடையும். கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழிலதிபர்கள் 90 சதவீத வேலை வாய்ப்பை வழங்கி உள்ளனர். பெண் தொழிலதிபர்களுக்கு அரசுகள் தொழில் தொடங்கவும், தொழில் நுட்ப வளர்ச்சியிலும் உறுதுணையாக நிற்க வேண்டும். இவ்வாறு இவாங்கா டிரம்ப் பேசினார்.

மோடியை புகழ்ந்த இவாங்கா

தனது பேச்சில் இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார். இவாங்கா பேசும்போது, ‘‘தொழில் துறையில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. டீ விற்கும் நிலையிலிருந்து பிரதமராகும் நிலைக்கு வந்த மோடி அனைவருக்கும் முன்னோடியாக விளங்குகிறார். பெண்களை அனைத்து துறையிலும் ஊக்குவிக்காவிட்டால் சமூகம் பின் தங்குமென்பதை மோடி உணர்த்தி வருகிறார். இதற்காக நான் அவரை மிகவும் பாராட்டுகிறேன்’’ என்று புகழ்ந்தார். ஆளுநர் நரசிம்மன், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், முதல்வர் கே. சந்திரசேகர ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

 மோடி, இவாங்காவை வரவேற்ற ரோபோ

ஹைதராபாத்தில் நேற்று தொடங்கிய சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இவாங்கா டிரம்பை ‘மித்ரா’ எனும் ரோபோ வரவேற்று அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. ஹைதராபாத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டார். நேற்று மாலை தொடங்கிய இந்த உச்சி மாநாட்டில்முதல் அரை மணி நேரம் வரை பல மாநில, வெளிநாட்டினர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘ஜெய ஹோ’ பாடலும் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, இவாங்காவை நோக்கி மனித உருவில் தயாரிக்கப்பட்டிருந்த ரோபோ வந்தது. இதனை பார்த்ததும் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அந்த ரோபோ வில் இருந்த இந்திய கொடியில் இருந்த பொத்தானை அழுத்தும்படி கேட்டுக்கொண்டதற்கு, மோடி அந்த பொத்தானை அழுத்தினார். அப்போது அந்த ரோபா, நரேந்திர மோடியை வரவேற்பதாக கூறியது. பின்னர் அதிலிருந்த அமெரிக்க கொடி பதித்த பொத்தானை இவாங்கா அழுத்தினார். அவரையும் இந்த சர்வதேச தொழில் முனவு உச்சி மாநாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி என அந்த ரோபோ கூறியது. இதனை கண்டு அங்கிருந்த பலர் ஆச்சர்யமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x