Published : 30 Jul 2014 10:00 AM
Last Updated : 30 Jul 2014 10:00 AM
நீதிபதிகளை நியமிக்க தற்போது நடைமுறையில் உள்ள ‘கொலீஜியம்’ முறையை மாற்றுவதில் சட்ட நிபுணர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியில் தொடர்ந்து ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நீதிபதிகளை நியமிக்கும் முறை நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 93-ம் ஆண்டுக்கு முன்பாக நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசிடம் இருந்து வந்தது. அதன் பின் உச்ச நீதிமன்றம் தாங்களே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் வகையில் ‘கொலீஜியம்’ என்ற உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் நியமனத்தை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இம்முறையை மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் இம்முயற்சி தீவிரம் அடைந்துள்ளது. நீதிபதிகள் நியமன முறையில் நடைபெறும் தவறுகள் குறித்து மார்க்கண்டே கட்ஜு வெளியிட்டு வரும் கருத்துகளை அடுத்து இம்முயற்சி மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
புதிய சட்டம் குறித்து அலசல்
மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள நீதிபதிகள் நியமனக் குழு சட்டம் (ஜாக்) குறித்து முக்கிய அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மூத்த முன்னாள் நீதிபதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் டெல்லியில் நடந்தது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏ.எம்.அஹமதி, வி.என்.கரே, முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள் சொலி சொரப்ஜி, கே.பராசரன், ஃபாலி நாரிமன், கே.டி.எஸ்.துளசி, கே.கே.வேணுகோபால், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோட்டகி, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சாந்தி பூஷண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சாந்தி பூஷண் கூறும்போது, ‘தற்போதுள்ள ‘கொலீஜியம்’ முறை தோல்வி அடைந்துவிட்டதை பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டனர். கடந்த 93-ம் ஆண்டுக்கு முந்தைய நீதிபதிகள் நியமனமும் கூடாது என்பதையும் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
சிறந்த நீதிபதிகளை வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்கும் வகையில் புதிய முறையை உருவாக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர்’ என்றார்.
ஆலோசனை தொடரும்
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோட்டகி கூறியபோது, ‘தற்போதுள்ள நீதிபதிகள் நியமன முறையை மாற்ற வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர். ‘கொலீஜியம்’ முறையை மாற்ற வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதுதான் அரசின் நோக்கம். எனவே நீதிபதிகள் நியமனக் குழு சட்டம் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படும்’ என்றார்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு அமைத்து நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வு தொலைக்காட்சியில் நேரடியாக மக்கள் அறியும் வகையில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT