Published : 02 Nov 2017 08:45 AM
Last Updated : 02 Nov 2017 08:45 AM

தெலங்கானா மாநிலத்துக்கு விரைவில் புதிய தலைமைச் செயலகம் அவசியம்: முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தல்

ஹைதராபாத்தில் இருப்பதை போன்ற மிக மோசமான தலைமை செயலகம், இந்த நாட்டிலேயே வேறெங்கிலும் இல்லை. தெலங்கானாவுக்கு விரைவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டியது அவசியம் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

தெலங்கானா மாநில குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பேசியதாவது: புதிய தலைமை செயலகம் கட்டப்பட வேண்டும். தெலங்கானாவின் கலாச்சாரத்தை தெரிவிக்கும் வகையில் இது கட்டப்படுதல் அவசியம். ஆனால் இதனை கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வேதனை அளிக்கிறது. தலைமைச் செயலகம் கட்டப்படுவதினால் ஏதோ காடுகளை எல்லாம் அழித்து விடுவது போல் பேசுவது சரியல்ல.

ஹைதராபாத்தில் உள்ள பழங்கால தலைமைச் செயலகத்தில் தீயணைப்பு வாகனங்கள் கூட விபத்து சமயத்தில் வந்து செல்ல போதிய வழி இல்லை. இதேபோன்று சட்டப்பேரவைக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தவும் இடம் இல்லை. மேலவைக்கு செல்ல வழித்தடம் மிக குறுகலாக உள்ளது. ஆதலால், நாட்டிலேயே மிகச்சிறந்த தலைமைச் செயலகம், சட்டப்பேரவை, போலீஸ் டிஜிபி அலுவலகம் போன்றவை ஹைதராபாத்தில் கட்டப்படும். இவை சுமார் 100 ஆண்டுகளுக்கு மக்களிடையே பேசப்பட வேண்டும். தற்போது உள்ள தலைமை செயலகத்தை போன்ற ஒரு மோசமான கட்டிடம் நம் நாட்டிலேயே இல்லை.

இவ்வாறு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பேசினார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டது. அதன்பின்னர் அமராவதியில் ஆந்திர மாநிலத்துக்கு மிக பிரம்மாண்ட தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டப் பணிகள் முடிந்து சில அலுவலகங்கள் செயல்பட தொடங்கி விட்டன. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்துக்கும் புதிய தலைமை செயலகம் வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x