Published : 13 Nov 2017 08:47 AM
Last Updated : 13 Nov 2017 08:47 AM
சபரிமலை சீசன் வரும் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இங்கு 15-ம் தேதி தற்காலிக துணை தபால் நிலையம் தொடங்கப்படுகிறது.
இந்தியாவில் 1,54,882 தபால் நிலையங்கள் உள்ளன. இதில் பம்பையில் உள்ள கிளை தபால் நிலையமும் அடக்கம். இதுபோக சபரிமலை யாத்திரை காலத்தில் இங்கும் தற்காலிக துணை தபால் நிலையம் திறக்கப்படும். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை யாத்திரை நாட்களில் பம்பையும் துணை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்படும். இவ்விரு துணை தபால் நிலையங்கள் மூலம் பக்தர்கள் பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர்.
இந்த துணை தபால் நிலையங்கள் வரும் 15-ம் தேதி முதல், ஜனவரி 19-ம் தேதி வரை செயல்பட உள்ளன. இதற்கென சபரிமலை தபால் அதிகாரியாக எம்.அய்யப்பனும், பம்பை தபால் அலுவலராக பிஜூவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேசிய விருதுபெற்ற ஓய்வுபெற்ற தபால் அலுவலர் நா.ஹரிஹரன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தொடக்க காலங்களில் பம்பை யில் இருந்துதான் சபரிக்கு தபால் கொண்டு சென்றனர். இதற்காக பம்பையில் தற்காலிக கிளை தபால் நிலையம் கடந்த 19.1.1974-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் கிளை தபால் அதிகாரியாக வாசுதேவன் நாயர் என்பவர் இருந்தார். கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி இது நிரந்தர கிளை தபால் நிலையமாக மாறியது.
இதேபோல் சபரிமலையிலும் சீசன் நேரங்களில் மட்டும் தற்காலிக துணை தபால் நிலையம் 1985-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. இவ்விரண்டு தபால் நிலையங்களிலும் உடனடி மணியார்டர் சேவை, மின், மொபைல் மணியார்டர் சேவைகள், விரைவுத் தபால், பதிவுத் தபால், சாதாரண தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. செல்போன் வசதி வருவதற்கு முன்னர் ஐயப்ப பக்தர்கள் இவற்றின் மூலம்தான் வந்து சேர்ந்ததையும், ஐயப்பனை தரிசித்து விட்டு திரும்புவதையும் உறவினர்களுக்கு தந்தி கொடுப்பார்கள். இதேபோல் பம்பையில் உள்ள வியாபாரிகள், தங்களின் அன்றாட விற்பனை வருமானத்தை தங்கள் வீடுகளுக்கு மணியார்டர் மூலம் அனுப்புவார்கள். இன்று செல்போன், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவது என தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இந்த அஞ்சலககங்களின் தேவையும், சேவையும் இன்று வரை குறையவே இல்லை.
பம்பை, சபரிமலையில் தபால் நிலையங்கள் வருவதற்கு முன்பு, இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியார் 4-ம் மைலில் இருந்து பூங்காவனம், புலிமேடு, உப்புபாறை வழியாக அடர்ந்த காட்டுக்குள் 13 கிலோ மீட்டர் நடந்து சென்றே தபால் பட்டுவாடா செய்துள்ளனர். இடுக்கியில் இப்போது வசிக்கும் ஓய்வுபெற்ற தபால்காரர் ராஜையாவுக்கு (84) இன்றும் வயோதிகத்துக்கு உரிய எந்த நோயும் எட்டிப் பார்க்கவில்லை. ஐயப்ப சேவையும், தொடர்ச்சியான பணிரீதியான நடைபயிற்சியும் தான் அதற்கு காரணம்.
அப்போது எல்லாம் வண்டிப்பெரியாறில் இருந்து சபரிமலை வழியாக பம்பைக்கு ஒருவரும், பம்பையில் இருந்து சபரிமலை வழியாக வண்டிபெரியாறுக்கு ஒருவரும் தபால் கொண்டு வந்துள்ளனர். சபரிமலை தேவஸ்தானத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர் கிருஷ்ணன்குட்டி அப்போது உதவிக்கு செல்வார். காரணம் அவ்வளவு கடிதங்கள் கோயிலுக்கு வரும். கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி, கொட்டாரக்கராவில் இருந்து பம்பைக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அதன் பின்னர் வண்டிப்பெரியாறு வழியாக நடந்து தபால் கொண்டு செல்வது நின்று போனது. மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான பம்பையில் உள்ள தபால் நிலையத்துக்கு பம்பை திரிவேணி என்றே பெயர் வைத்துள்ளனர்.
பம்பையில் இருந்து சபரிமலைக்கு இப்போதும் நடந்தே தபால் கொண்டு செல்கின்றனர். சபரிமலையில் தேவசம்போர்டு, வனத்துறை, பொதுப்பணித்துறை அலுவலகம், மின் துறை, தீயணைப்புத் துறை அலுவலகங்களும் உள்ளன. இங்கெல்லாம் தினசரி கடிதங்கள் வரும். இதே போல் சுவாமி அய்யப்பன் பெயருக்கே, திருமணம், கிரகப் பிரவேச அழைப்பிதழ் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு கடிதம் வரும். அவற்றை சுவாமி சன்னதி யில் வைக்க அனுப்புவார்கள். இதே போல் பம்பையில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆட்டதோடு என்னும் பழங்குடி கிராமத்துக்கும் இன்றும் நடந்துதான் தபால் போய் சேர்கிறது.
சபரிமலை ஐயப்பனின் சிறப்பை பறைசாற்றும் வகையில் 1974-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி சிறப்பு அஞ்சல் மேல் உறை வெளியிடப்பட்டது. 18 படி கொண்ட சிறப்பு தபால் முத்திரை 1980-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சபரிமலையின் அஞ்சல் குறியீட்டு எண் 689713 ஆகும். அங்கு இருந்து கடிதங்கள் அனுப்பினால் அச்சடிக்கும் முத்திரை யில் 18 படிகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT