Published : 14 Jul 2014 02:46 PM
Last Updated : 14 Jul 2014 02:46 PM

தீவிரவாதி ஹபீஸ் சயீத்துடன் ராம்தேவ் நண்பர் சந்திப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை பத்திரிகையாளரும் யோகா குரு பாபா ராம்தேவுக்கு நெருக்கமானவருமான வேத் பிரதாப் வேதிக் சந்தித்தது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடு பட்டனர்.

இதனால், அவை நடவடிக்கை கள் இருமுறை ஒத்திவைக்கப் பட்டன.

ஜமாத்-உத்-தவாவின் தலை வரும், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியுமான ஹபீஸ் சயீத்தை கடந்த 2-ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் வேத் பிரதாப் சந்தித்தார். இது தொடர் பான புகைப்படம் சமூகவலைதளங் களில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியானது.

இதைத் தொடர்ந்து, வேத் பிரதாப் வேதிக், மத்திய அரசின் அனுமதியுடன்தான் ஹபீஸை சந்திக்கச் சென்றாரா என்பது குறித்தும், இருவரும் பேசிய விவரங்கள் பற்றியும் தெரிவிக்க வேண்டும். வேதிக்கை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

மாநிலங்களவை திங்கள் கிழமை தொடங்கியதும், கேள்வி நேரத்தின்போது, ஹபீஸ் சயீத் வேத் பிரதாப் சந்திப்பு விவகாரத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் எழுப்பினார். இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்க வேண்டும் என்றும் திக்விஜய் சிங் வலியுறுத்தினார்.

அதை நிராகரித்த மாநிலங்கள வைத் தலைவர் ஹமீது அன்சாரி, இந்த விவகாரம் குறித்து கேள்வி நேரத்தின்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது. முறையான அனுமதி பெற்ற பின் அது தொடர்பாக கேள்வி கேட்கலாம் என்று தெரிவித்தார்.

இரு முறை ஒத்திவைப்பு

ஆனால், அதை ஏற்காத காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடு பட்டனர். இதையடுத்து மாநிலங் களவை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அவை கூடியபோது, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்தனர்.

குலாம்நபி ஆசாத் பேசும்போது, “யாருடைய உத்தரவின் பேரில் வேதிக் தூது சென்றார் என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்றார்.

ஆனந்த் சர்மா பேசும்போது, “ஹபீஸ் சயீத் இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் தேடப்படும் தீவிரவாதியாக அறி விக்கப்பட்டுள்ளார். அவருடனான வேத் பிரதாப்பின் சந்திப்பு குறித்த விவரம் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்கப்பட்டுள்ளதா’’ என கேள்வி எழுப்பினார்.

அருண் ஜேட்லியின் பதில்

அதற்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “ஹபீஸ் சயீத் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளார். பத்திரி கையாளர்களின் தனிப்பட்ட செயல் பாடுகளில் அரசு தலையிட முடி யாது. இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

ஹபீஸ் சயீத்தை சந்திக்க யாருக் கும் மத்திய அரசு அனுமதியளிக்க வில்லை” என்றார்.

ஜேட்லியின் பதிலை ஏற்காத காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கை கள் மதியம் வரை ஒத்தி வைக்கப் பட்டன.

ராம்தேவிற்கு நெருக்கமான வேதிக்

பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான யோகா குரு பாபா ராம்தேவுக்கு நெருக்கமானவர் வேத் பிரதாப் வேதிக். டெல்லியின் மூத்த பத்திரிகையாளரான வேதிக், பாஜகவின் பல மூத்த தலை வர்களுக்கு நெருக்கமானவர். இவர், ஹபீஸை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை அவரே சமூக வலைதளங்களில் வெளி யிட்டதாகக் கூறப்படுகிறது.

வேதிக் கருத்து

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேதிக், “பாகிஸ்தானில் உள்ள அமைதி ஆய்வு மையத்தின் அழைப்பின் பேரில், வேறு சில பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நான் பாகிஸ்தான் சென்றிருந்தேன். அப்போது ஹபீஸை சந்தித்தேன். அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். பிரதமர் மோடி அல்லது வேறு எவருக்குமான தூதுவராக சந்திக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்புவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x