Published : 08 Nov 2017 09:51 AM
Last Updated : 08 Nov 2017 09:51 AM

பயணியிடம் மூர்க்கம்: பணியாளரை நீக்கி மன்னிப்பு கேட்டது இண்டிகோ விமான நிறுவனம்

தங்கள் விமானப் பயணியை மூர்க்கமாக நடத்திய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பணியாளரை வேலையிலிருந்து நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டுள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.

கடந்த அக்டோபர் 15 அன்று ராஜிவ் கட்டியால் என்ற பயணி சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் சென்றிருக்கிறார்.

அவர் டெல்லி சென்ரு இறங்கியதும் அங்கிருந்த இண்டிகோ பணியாளர் ஜூபி தாமஸ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ராஜிவ் கட்டியாலை அங்கிருந்த  இணைப்புப் பேருந்தில் ஏற விடாமல் தரையில் பிடித்து அழுத்தி மூர்க்கமாக கையாண்டனர் அங்கிருந்த இண்டிகோ பணியாளர்கள். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தார் சக இண்டிகோ பணியாளர் மோண்டு கர்லா.

பயணியை மூர்க்கமாக நடத்திய பணியாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் மோண்டுவை பணிநீக்கம் செய்தது இண்டிகோ. மோண்டு எடுத்த வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. விமானத் துறை அமைச்சர் ஜெயந்த், இண்டிகோ நிறுவனர் ராகுல் பாடியாவிடம் இது குறித்து பேசியுள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் தீவிரமாகி தற்போது இண்டிகோ நிறுவனம் இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது.

இது பற்றி இண்டிகோவின் தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் ஆதித்யா கோஷ், அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். அந்த அறிக்கையின் தமிழாக்கம் பின்வருமாறு:

"வாடிக்கையாளர்களை மரியாதையுடன் நடத்துவதே எங்கள் சேவையின் அடித்தளம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்கிறோம். இந்த காரணத்தால் தான் தேசத்தில் இருக்கும் மற்ற விமான சேவைகளை விட இண்டிகோ சேவையை வாடிக்கையாளர்கள் அதிக முறை தேர்ந்தெடுத்துள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் எங்கள் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. அந்த சம்பவம் குறித்த காணொலி எங்கள் பார்வைக்கு வந்தது, நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களை நாங்கள் இடைநீக்கம் செய்துள்ளோம். சம்பவம் நடந்த அன்றே தனிப்பட்ட முறையில் அந்த வாடிக்கையாளரை நான் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டேன். எப்படி கோபமூட்டியிருந்தாலும் எங்கள் பணியாளர் எல்லை மீறியிருக்கிறார். எங்கள் நடைமுறைகளை பின்பற்றவில்லை. எங்கள் பணியாளரால், எங்கள் பயணி எப்படியான அசவுகரியத்தை அனுபவத்திருப்பார் என்பதை நான் உணர்கிறேன். மீண்டும், தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நடந்த சம்பவம் எங்கள் கொள்கையை பிரதிபலிக்கும் செயல் அல்ல.

இண்டிகோவில், எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் கண்ணியத்தை காக்கதான் அதிக முக்கியத்துவம் தருகிறோம். இரு தரப்பில் யாருடைய கண்ணியத்துக்கு பாதிப்பு வந்தாலும் அது எங்கள் பார்வையில் தீவிரமான பிரச்சினையே. நடத்தை விதிமுறைகளை மீறியதன் அடிப்படையில், எங்களால் நியமிக்கப்பட்ட குழு சம்பவத்தைப் பற்றி விசாரித்துள்ளது. சம்பவத்துக்கு காரணமான முக்கியக் குற்றவாளியான பணியாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்தான் அந்தச் சூழலை தூண்டிவிட்டு இன்னும் மோசமாக்கினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இண்டிகோ வாடிக்கையாளர் சேவையின் நோக்கத்துக்கு நேரதிராக செயல்பட்டவர் அவர். பாதிக்கப்பட்ட பயணிக்கு மீண்டும் என் தனிப்பட்ட மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்".

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, இண்டிகோ பணியாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து குற்றம்சாட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x