Published : 04 Nov 2017 10:16 AM
Last Updated : 04 Nov 2017 10:16 AM

திருமலையில் வாகனப் புகையால் விலங்கு, பறவை, மரங்களும் பாதிப்பு மாசு கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி அறிக்கை

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதி முழுவதும் காற்றில் மாசுத்தன்மை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இது மெட்ரோ நகரங்களை மிஞ்சும் வகையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இதன் சராசரி கூடிக்கொண்டே உள்ளது. இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வு அறிக்கை ஆந்திர அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நைட்ரஜன் டையாக்ஸைடு வாயு காரணமாக மாசு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிலிருந்து இது அபாயகர அளவில் கூடி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களின் வாகன எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அலிபிரி வாகன சோதனைச் சாவடியில் எடுத்த கணக்கு விவரப்படி, தினசரி சுமார் 3000 மோட்டார் பைக்குகள், 5000 கார், ஜீப் போன்ற வாகனங்களும் 2000 அரசு பேருந்துகளும் திருமலைக்கு வருகின்றன.

நைட்ரஜன் டையாக்ஸைடு அளவு அதிகரிப்பது, சேஷாசலம் பகுதில் உள்ள விலங்குகள், பறவைகள், மரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நைட்ரஜன் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டையாக்ஸைடு போன்ற வாயுக்கள் நச்சுத்தன்மை மிக்கவை. இவை சுவாசப் பை, மூளை, இதயம் மற்றும் கல்லீரலை பாதிக்கச் செய்யும். இந்த வாயுக்கள் 40 மைக்ரோ கிராம் அளவு காற்றில் கலந்தால், அபாயகரமானது என வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுவே 70 மைக்ரோ கிராம் அளவை தாண்டினால் மிகவும் ஆபத்தாகும். ஆனால் தற்போது, திருமலையில் தினசரி 80 மைக்ரோ கிராம் அளவுக்கு இந்த மாசு காற்றில் கலந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருப்பதி மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் நரேந்திரா கூறும்போது, “திருமலையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டோம். காற்றில் 80 மைக்ரோ கிராம் அளவுக்கு நைட்ரஜன் டையாக்ஸைடு கலப்பது மிகவும் ஆபத்தானது. மிகப்பெரிய மெட்ரோ நகரங்களில் கூட இது போன்ற மாசு காற்றில் கலக்காது. இதுகுறித்து அரசும், தேவஸ்தானமும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x