Published : 15 Jul 2023 01:12 PM
Last Updated : 15 Jul 2023 01:12 PM

டெல்லி வெள்ளம் | ‘ஹத்னிகுண்ட்’ விவாதத்திற்கு மத்தியில் கேஜ்ரிவாலை சாடிய பாஜக

டெல்லி வெள்ள பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் வெள்ள நீரில் தத்தளிப்பது குறித்து டெல்லி ஆம் ஆத்மி மற்றும் ஹரியாணா பாஜக அரசுகள் மாறிமாறி குற்றம் சுமத்தும் நிலையில் டெல்லியின் சில பகுதிகளில் சாலைகள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை வரலாறு காணாத அளவுக்கு யமுனையின் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளைக் கடந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. டெல்லியின் வெள்ள கட்டுப்பாட்டு ஆணையத்தின் வெள்ள கட்டுப்பாட்டகம் சேதமடைந்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து சேதமடைந்த பகுதி வழியாக வெள்ள நீர் நகருக்குள் புகுந்து நகரின் மையப் பகுதியான திலக் மார்க் பகுதியில் அமைந்துள்ள உச்சநீதிமன்றம் வரை நுழைந்தது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் நிலைமையை சீர் செய்ய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியை நாடினார்.

முதல்வரின் நன்றி: வியாழக்கிழமை இரவு நகருக்குள் புகுந்த யமுனை நீர் வெள்ளிக்கிழமை இரவு வடியத்தொடங்கியது. இருந்தாலும் டெல்லியின் ஐடிஓ பகுதிகள் சனிக்கிழமையும் வெள்ளத்தில் மூழ்கி இருந்தன. இந்தநிலையில் தொடர்ந்து 20 மணிநேரம் இடைவிடாமல் போராடி பணி செய்து ஐடிஓ பகுதி தடுப்பணையை சீர்செய்த ராணுவ பொறியாளர் பிரிவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சுமார் 20 மணிநேரம் இடைவிடாத கடின உழைப்புக்கு பின்னர், ஐஓடி தடுப்பணையில் சிக்கியிருந்த முதல் கதவு திறக்கப்பட்டது. நீர்மூழ்கி வீரர்கள் குழு கம்ப்ரஸரின் உதவியுடன் வண்டல் மண்களை வெளியேற்றினர். அதன் பின்னர் ஹைட்ராலி க்ரெயின் மூலம் கதவு மேலே இழுக்கப்பட்டது. விரைவில் ஐந்து கதவுகளும் திறக்கப்படும். ராணுவ பொறியியல் பிரிவுக்கும் நீர்மூழ்கி வீரர்களுக்கும் சிறப்பு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வரின் இந்த பதிவிற்கு பாஜகவின் அமித் மாளவியா பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். அதில், "அனைத்து வேலைகளையும் ராணுவத்தின் பொறியியல் பிரிவும் அதன் நீர்மூழ்கி வீரர்களும் செய்தனர். நீங்கள் ஒரு ட்விட்டர் பதிவின் மூலம் அதன் பலனை அடைய முயற்சிக்கிறீர்கள்" என்று விமர்சித்துள்ளார்.

‘ஹத்னிகுண்ட்’ தண்ணீர் திறப்பில் பாஜக vs ஆம் ஆத்மி: இதனிடையே ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்த ஒரு வீடியோ பதிவில், உத்தரப் பிரதேசம் வறண்டு இருக்கையில் ஹரியாணாவின் பாஜக அரசு வேண்டும் என்றே யமுனை வழியாக ஹத்னிகுண்ட் தடுப்பணையின் நீரை மொத்தமாக வெளியேற்றி உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தது.

குற்றச்சாட்டு: செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மற்றும் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஆகியோர், "வெள்ளம் ஏற்படும் போது ஹத்னிகுண்ட் அணையில் இருந்து உத்தரப் பிரதேசம், ஹரியாணா, டெல்லி வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் ஜூலை 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை அனைத்து நீரும் டெல்லி வழியாகவே திறந்து விடப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களுக்கும் சமமான அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் யமுனையின் கரையில் இருக்கும் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதுகாப்பாக இருந்திருக்கும்" என்றனர். கடந்த சில நாட்களாக நாட்டில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பெயர்களைப் பட்டியலிட்ட சஞ்சய் சிங், கடந்த முன்று நாட்களாக மழை பெய்யாத நிலையில் டெல்லி எப்படி இந்தப் பட்டியலில் இடம் பிடித்தது என்று கேள்வி எழுப்பினார்.

ஹரியாணா பதில்: டெல்லி அரசின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என்று ஹரியாணா அரசு பதிலளித்துள்ளது. அம்மாநில செய்தி தொடர்பு துறை வெளியிட்டுள்ள தொடர்ச்சியான ட்விட்டர் பதிவில், மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் 1 லட்சம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் அவை யமுனையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் வழியாக (டெல்லியைத் தவிர பிற வழிகள்) வெளியேற்ற முடியாது என்று கூறப்பபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், ஹரியாணா முதல்வரின் ஆலோசகருமான (நீர்பாசனம்) தேவேந்தர சிங், "இதில் சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்றும் இல்லை. இந்த விவாகரத்தில் தேவையில்லாத முரண்கள் உருவாக்கப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார். பாஜகவின்அமித் மாளவியா கூறும் போது," ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து உத்தர பிரதேசத்திற்கு பாசனத்திற்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன் மூலம் வெள்ளத்தை தடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

பாஜக எம்பி காம்பீர் குற்றச்சாட்டு: வெள்ளம் குறித்து பாஜக எம் கவுதம் காம்பீர் கூறுகையில், "டெல்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. 100 மி.மீ., மழை அளவைத் தாங்கும் அளவுக்கு மட்டுமே டெல்லி நகர அமைப்பு தயார் நிலையில் உள்ளது. அப்படி என்றால் இத்தனை வருடங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்? இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக இலவச அரசியலில் கவனம் செலுத்தினால் இப்படிதான் நடக்கும்" என்று கூறியுள்ளார்.

ஆளுநர் vs கேஜ்ரிவால்: டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா, முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் டெல்லி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோருடன் ஐடிஓ பகுதியின் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நேரில் சென்றார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆளுநரின் பேச்சை இடைமறித்து பேசிய அமைச்சர் பரத்வாஜ், "நாங்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவே வாட்ஸ் அப் குழுவில் டெல்லி தலைமைச் செயலருக்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையை அழையுங்கள், இல்லையென்றால் டெல்லியின் முக்கிய பகுதிகளுக்குள் தண்ணீர் நுழையக்கூடும் என்று தெரிவித்திருந்தோம், ஆனால் எங்கள் செய்தி பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை" என்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஆளுநர், "நானும் நிறைய விஷயங்களை சொல்ல முடியும். இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது இது இல்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x