Published : 14 Jul 2023 04:54 AM
Last Updated : 14 Jul 2023 04:54 AM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வன்முறைக்கு இடையே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. தேர்தலின்போது நடந்த பெருமளவு வன்முறையால் 696 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலையில் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.
பாஜகவுக்கு 2-ம் இடம்: இந்நிலையில் மொத்தமுள்ள 20 மாவட்ட பஞ்சாயத்துகளையும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இதுதவிர மொத்தமுள்ள 341 பஞ்சாயத்து சமிதிகளில் 317-ஐயும் 3,317 கிராம பஞ்சாயத்துகளில் 2,644-ஐயும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இத்தேர்தலில் பாஜக இரண்டாமிடம் பெற்றுள்ளது. அக்கட்சி 6 பஞ்சாயத்து சமிதிகளிலும் 220 கிராம பஞ்சாயத்துகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இடதுசாரிகள் 2 பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் 38 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி 4 கிராம பஞ்சாயத்துகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, இத்தேர்தல் வெற்றிக்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பதிவில், “மேற்கு வங்க மக்கள் மனதில் திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பாஜக வெற்றி பெற்ற பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் எஸ்சி, எஸ்டி-களுக்கான 18 தொகுதிகளில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 8-ல் வெற்றி பெற்றது. இத்தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
19 பேர் உயிரிழப்பு: திரிணமூல் காங்கிரஸின் வெற்றி கொண்டாடக் கூடியதாக இருந்தாலும் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறை தன்னை கவலை அடையச் செய்துள்ளதாக முதல்வர் மம்தா கூறியுள்ளார்.
“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஜூன் 8 முதல் தேர்தல் தொடர்பான வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் திரிணமூல் கட்சியை சேர்ந்தவர்கள். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு முழு சுதந்திரம் அளித்தேன்” என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT