Published : 13 Jul 2023 08:16 PM
Last Updated : 13 Jul 2023 08:16 PM
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையே பெய்யாமல் சூழ்ந்துள்ள இந்த வெள்ளம் நகரவாசிகளை திகைப்பில் ஆழ்த்து திணறடித்து வருகிறது. இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை டெல்லி செங்கோட்டை மூடப்படுவதாக தொல்லியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
திடீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சாக்சேனா டெல்லி பேரிடர் மேலாண்மைக் குழுவிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஞாயிறு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நகரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை பொதுப் பணித் துறை மேற்கொண்டு வருகிறது. லோக் நாயக் மருத்துவமனையிலிருந்து எமர்ஜென்சி வார்டில் உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வாகனங்களுக்கு தடை: யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாலை தொடங்கி டெல்லி சராய் காலே கான் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதல்வரின் வேண்டுகோள்: முன்னதாக இன்று காலை முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "யமுனையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது வெள்ளம் யமுனையைச் சுற்றியுள்ள சாலைகளில் புகுந்துள்ளது. அதனால் வெள்ள அபாயம் இருக்கும் பாதைகளை மக்கள் தவிர்க்க வேண்டும். வெள்ளம் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்களைக் காப்பதே இப்போதைய தலையாய கடமை. இந்த அவசர காலத்தில் மக்கள் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்குமாறு வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
திடீர் வெள்ளத்துக்குக் காரணம் என்ன? - மழை இல்லாமல் பெய்துள்ள திடீர் வெள்ளம் குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து டெல்லிக்கு உபரி நீர் வெகு சீக்கிரமாக வந்தடைந்துள்ளது. நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக அது கடந்து செல்ல ஒரு குறுகிய பாதை மட்டுமே உள்ளது. வெள்ளம் பாய்வதன் வேகமும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் பல வழிகளிலும் உபரி நீர் வெகு துரிதமாக யமுனையை வந்தடைந்து அங்கு நீர்மட்டத்தை தொடர்ந்து உயரச் செய்து வருகிறது.
அதேபோல், வண்டல் மண் அதிகமாக சேர்ந்ததன் காரணமாக யமுனை ஆற்றுப் படுகையும் உயர்ந்துள்ளது. இதனாலேயே அதிக மழையில்லாவிட்டாலும் கூட யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது" என்றனர்.
படிப்படியாக வெள்ளம் வடியும்: போக்குவரத்து ஸ்தம்பித்து, குடிநீர் விநியோகம் பாதித்து பல்வேறு சிக்கல்களும் ஏற்பட்டுள்ள சூழலில் இன்றிலிருந்து யமுனையில் வெள்ள நீர் படிப்படியாகக் வடியும் என்று மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. | வாசிக்க > கம்பீர் Vs பிரியங்கா கக்கர் - டெல்லி வெள்ள நிலைமையை முன்வைத்து வார்த்தைப் போர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT