Published : 13 Jul 2023 02:24 PM
Last Updated : 13 Jul 2023 02:24 PM
புதுடெல்லி: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டைத் தவிர்த்துவிட்டு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் எவ்வாறு சர்வதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக, டெல்லியில் பிரான்ஸ் நாட்டின் 'லே எக்கோஸ்' பத்திரிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டியளித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவது தொடர்பாக தன் கருத்தை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. ஆகையால் அதற்கான சரியான இடத்தை அது மீண்டும் பெறவேண்டும்" என்று கூறியுள்ளார்.
அவர் அளித்தப் பேட்டியில், "ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி தராத பிரச்சினை வெறும் நம்பகத்தன்மை சார்ந்தது மட்டும் அல்ல. சர்வதேச அரங்கில் தெற்குலகின் உரிமைகள் நீண்ட காலமாகவே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனால், தெற்குலக நாடுகள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. ஜனநாயகத்தின் உண்மையான மாண்பு மதிக்கப்படவில்லை.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் மற்றும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட தேசம் நிரந்தர உறுப்பினராக இல்லாதபோது, அந்த அமைப்பு எப்படி உலக நலனுக்காகப் பேச முடியும். மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையில் அதன் போக்கு வெளிப்படைத் தன்மையற்ற நிலையையே உருவாக்கும். அதனால், இன்றைய உலகின் சவால்களை சமாளிக்க இயலாமல் போகும்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் என்ன மாதிரியான மாற்றம் இருக்க வேண்டும் என்பதை நிறைய தேசங்கள் இப்போது தெளிவாகப் புரிந்து வைத்துள்ளன. அதேபோல் இந்தியா என்ன மாதிரியான பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் இதே கருத்தை என்னிடம் பகிர்ந்துள்ளார்" என்றார் பிரதமர் மோடி.
உக்ரைன் போர் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இவ்விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானதாகவும், வெளிப்படத்தன்மை மிகுந்ததாகவும் இருக்கிறது. இது யுத்தத்துக்கான காலம் அல்ல. இரு தரப்புமே பேச்சுவார்த்தை மூலமாக அமைதி காண வேண்டும் என்று நான் வலியுறுத்தியுள்ளேன். போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் உதவி செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்பதையும் இரு தரப்புக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு தேசமும் இன்னொரு தேசத்தின் இறையாண்மையை மதிக்க வேண்டும். பிராந்திய ஒருமைப்பாடுகளை மதித்து சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT