Published : 13 Jul 2023 04:12 AM
Last Updated : 13 Jul 2023 04:12 AM
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80- ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் மலைகள் நிறைந்த இமாச்சல பிரதேசம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கி உள்ளது.
குறிப்பாக, சண்டிகர்-மணாலிமற்றும் சிம்லா-கல்கா நெடுஞ்சாலைகள் உட்பட 1,300 சாலைகள் நிலச்சரிவு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
இமாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். நிலச்சரிவால் சாலை களில் சிக்கி தவிக்கின்றனர். வாகனங்களும் நிலச்சரிவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மீட்புப் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். மணாலியிலிருந்து மண்டி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஒருவழிப் பாதை திறக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் கடந்து சென்றன.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 15-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவிபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.4 ஆயிரம்கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு நேற்று முன்தினம் குல்லு பகுதிக்கு சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும்நிவாரணப் பணிகள் வேகமாகமேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment