Last Updated : 12 Jul, 2023 12:26 PM

1  

Published : 12 Jul 2023 12:26 PM
Last Updated : 12 Jul 2023 12:26 PM

கர்நாடகா, கேரளா கனமழை எதிரொலி: கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கிருஷ்ணராஜசாகர் அணை | கோப்புப் படம்

பெங்களூரு: கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்‍பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா, ஹசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

இதேபோல காவிரியின் முக்கிய துணை ஆறான கபிலா உற்பத்தி ஆகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2269 ஆக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் வந்துகொண்டிருக்கும் நிலையில், 800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 87.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 374 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக இருந்த நிலையில், ஒரே வாரத்தில் 10 அடிக்கும் மேலாக நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் மாண்டியா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x