Published : 12 Jul 2023 04:37 AM
Last Updated : 12 Jul 2023 04:37 AM
புதுடெல்லி: பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 8 தலைவர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் போபால் நகரில், கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார். அதே நேரத்தில் சட்ட ஆணையம் இது குறித்து கருத்துகளை கேட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடை பெறவுள்ள நிலையிலும், அடுத் தாண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும், பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு பாஜக.வின் தேர்தல் பிரச்சார வியூகமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சிறுபான்மை அமைப்புகள் இது தொடர்பான விவாதத்தை நடத்தி வருகின்றன. இதற்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களுக்கு மட்டும் பொது சிவில் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கலாம் என பாஜக.வில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும்வரை இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது. ஆனாலும், பொது சிவில் சட்டம் குறித்து பாஜக பேசுவது, வாக்காளர்களை பிரிக்கும் மற்றொரு முயற்சி என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இப்போதைக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை என முந்தைய சட்ட ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்ததையும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
அதே நேரத்தில் பொது சிவில் சட்டம் அறிவிக்கப்பட்டால், அதில் காங்கிரஸின் நிலைப்பாட்டை தெரிவிக்க கட்சியினரை தயார்படுத்த வேண்டும். இதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் சட்ட நிபுணர்கள் உட்பட 8 தலைவர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது சிவில் சட்டம் குறித்து இந்தக் குழு ஆராய்ந்து, கட்சித் தலைமைக்கு தேவையான ஆலோசனையை வழங்கும். ஆனால், இதன் அறிக்கை பொதுவில் வெளியிடப்படாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT