Published : 12 Jul 2023 05:05 AM
Last Updated : 12 Jul 2023 05:05 AM
புதுடெல்லி: டெல்லியில் வேளாண் உற்பத்தியாளர் குழு கூட்டுறவுகளின் மெகா மாநாடு ஜூலை 14-ல் நடைபெறுகிறது. இதை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.
மத்திய கூட்டுறவு அமைச்சகத்துடன் இணைந்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்(என்சிடிசி) இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்துதல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு நாள் மெகா மாநாடாக நடைபெற உள்ளது.
இந்த மாநாடு தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பற்றி விவாதிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
விவசாயிகளால் உருவாக்கப்பட்ட இக்குழுக்கள் கூட்டு நிறுவனங்களாக உள்ளன. வளங்களைத் திரட்டவும், பேரம் பேசும் ஆற்றலை அதிகரிக்கவும், விவசாயத்தில் புதுமை மாற்றத்திற்கான ஒரு நடைமுறையாகவும் இந்த மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவு மூலம் வளம் பெறுதல்: பிரதமர் நரேந்திர மோடியின் “கூட்டுறவு மூலம் வளம் பெறுதல்” கனவை நனவாக்கும் வகையில், கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் 1,100 புதிய உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்குவதற்கான முடிவு சமீபத்தில் எடுக்கப்பட்டது. இது, மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவின் முயற்சியினால் சாத்தியமானது.
உழவர் உற்பத்தியாளர் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.33 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும், ஊக்குவிப்பு நிதியாக ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.25 லட்சம் அதனை உருவாக்கும் பகுதி அடிப்படையிலான வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
விவசாயத்தை பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் விவசாயத்தை நம்பியிருப்பவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் உற்பத்தியாளர் குழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
இவை, சிறு மற்றும் குறுவிவசாயிகள் அல்லது உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலையைபெற்றுத்தருகின்றன. போக்குவரத்துச் செலவைக் குறைத்து, ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.
விவசாயிகளுக்கு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வழங்கல்போன்ற வணிக வரம்பை விரிவுபடுத்துவதற்கு வேளாண்மைக் கடன் சங்கங்களை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. இதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நமது நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சுமார் 13 கோடி விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளன. இச்சங்கங்கள் முதன்மையாக குறுகிய கால கடன் மற்றும் விதைகள், உரங்கள்உள்ளிட்டவைகளின் விநியோகத்தில் ஈடுபடுகின்றன.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாகும், இது கூட்டுறவுகளுக்கு திட்டமிடுதல், ஊக்குவித்தல் மற்றும் நிதியளிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
2022-23 நிதியாண்டில், இக்கழகம் வேளாண் தொடர்பான திட்டங்கள், நலிவடைந்த கூட்டுறவுகள், கூட்டுறவுகளில் கணினிமயமாக்கல் போன்றவற்றிற்கு ரூ.41,031.39 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT