Published : 11 Jul 2023 07:11 PM
Last Updated : 11 Jul 2023 07:11 PM
புதுடெல்லி: டெல்லி, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்குவதால் ஆங்காங்கே வெள்ளம், நிலச்சரிவு என மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தராகண்ட்டின் பல மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலெர்ட்களை விடுத்துள்ளது இந்தியா வானிலை ஆய்வு மையம். அதேவேளையில், பஞ்சாப், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகரில் மழை படிப்படியாகக் குறையும் என்ற ஆறுதல் செய்தியையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்டில் எங்கெங்கு ரெட் அலர்ட்: உத்தராகண்டின் சோலன், சிம்லா, சிர்மார், குலு, மாண்டி, கினாவுர் மற்றும் லாஹூல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உனா, ஹாமீர்பூர், காங்ரா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாண்டி, கினாவுர், லாஹூல் ஸ்பிதி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ள அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அபாய எல்லையைக் கடந்த யமுனை ஆறு: டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு 206 மீட்டர் என்ற அபாய அளவைக் கடந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர். டெல்லியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 39 பிரிவுகள் தயார் நிலையில் உள்ளன.
மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை: ஜம்முவின் அடிவார முகாமில் இருந்து இன்று மதியம் மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்டது. கனமழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக இந்த யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரம்பான் பகுதியில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மதியம் முதல் புதிதாக யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்று மட்டும் 7 பேர் பலி: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் 4 பேர் உத்தராகண்டிலும், உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப்பில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். திங்கள்கிழமை வரை உயிரிழப்பு 37 ஆக இருந்த நிலையில் இன்று இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். பாலைவன நிலப்பரப்பு கொண்ட ராஜஸ்தான் முதல் இமாச்சலப் பிரதேசம் வரை பல வட மாநிலங்கள் இன்றும் வெள்ளத்தில் தான் தத்தளிக்கின்றன. மாநில அரசுகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் 300 பேர் பல இடங்களிலும் சிக்கித் தவிக்கின்றனர். சிம்லா, சீர்மார், கினாவூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளில் இன்னும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற இயலாத சூழல் நிலவுவதால் அங்கு மக்கள் தவித்து வருகின்றனர்.
வடமேற்கு இந்தியாவைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று நாட்களாகவே ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்கிறது. உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் கனமழை முதல் அதிகனமழை வரை பதிவாகியுள்ளது. இதனால் ஆறுகள், சிற்றாறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப்பில் அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. | பார்க்க > டெல்லியில் யமுனை கரையோர வசிப்பிடங்களை சூழந்த வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு - போட்டோ ஸ்டோரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...