அபிஷேக் பானர்ஜி மீதான விசாரணையை நிறுத்த முடியாது - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
புதுடெல்லி: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மீதான அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மேற்குவங்க கல்வித் துறையில் 13,000 ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணி நியமனத்தில் சில ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதன்படி முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவரும், நடிகையுமான சயோனி கோஷும் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறும், அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அபிஷேக் பானர்ஜியின் வழக்கறிஞர் எம்.எஸ்.சிங் கூறியதாவது: அபிஷேக் பானர்ஜி மீது பொய்யான வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறை ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அபிஷேக் மீதான அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கில் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே.
அபிஷேக் பானர்ஜி மீதான வழக்கு விவரங்கள், அவர் சார்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்த பின்னரே விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அபிஷேக் பானர்ஜி மீதான அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்த நாங்கள் உத்தரவிட முடியாது.
விசாரணை முடங்கும்: இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடப் போவ தில்லை. நாங்கள் தலையிட்டால் விசாரணை முடங்கும். எனவே, மனுதாரர் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
