Published : 11 Jul 2023 05:45 AM
Last Updated : 11 Jul 2023 05:45 AM
பெங்களூரு: கர்நாடகாவில் சமண மத குரு ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை ஆழ்துளை கிணற்றில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி அருகேயுள்ள ஹிரேகோடியில் நந்திபர்வத சமண மடம் உள்ளது. இதன் குருவாக காமகுமார நந்தி மகாராஜா இருந்தார். இவர் கடந்த ஜூன் 5-ம் தேதி தனது அறையில் தூங்கும்போது மாயமானார். இதையடுத்து அவரது சீடர்கள் எங்கு தேடியும் காமகுமார நந்தி மகாராஜா கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிக்கோடி போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீஸார் மடத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் 2 ஊழியர்களிடம் தனித்தனியாக வைத்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
அதாவது, இருவரும் குரு காமகுமார நந்தி மகாராஜாவிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளனர். அந்த பணத்தை அவர் கேட்டதால் இருவரும் திட்டமிட்டு அவரை கொலை செய்ததாக கூறியுள்ளனர். போலீஸில் இருந்து தப்பிப்பதற்காக அவரது உடலை கூறு போட்டு ஆழ்துளை கிணற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் நேற்று முன் தினம் மடத்தின் ஓரத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றை தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 11 மணி நேர பணிகளுக்கு பிறகு, குருவின் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் உள்ளிட்ட 9 பாகங்கள் சிக்கின. கைப்பற்றப்பட்ட பாகங்களை பெலகாவி மருத்துவமனைக்கு சோதனைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் 2 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தினர். அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா அங்கு சென்று சமண குருக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சமணர்களுக்கு உரிய பாதுகாப்பை மாநில அரசு அளிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT