Published : 10 Jul 2023 05:30 AM
Last Updated : 10 Jul 2023 05:30 AM

வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.

வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில், பருவமழை தற்போது தீவிரமடைந்து டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி 17 செ.மீ. மழை பதிவானது. அதன் பிறகு டெல்லியில் நேற்று ஒரே நாளில் 15.3 செ.மீ. மழை பெய்துள்ளது. 41 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்.

டெல்லியின் முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனையில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வரலாறு காணாத மழையால் டெல்லி அரசு ஊழியர்களின் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நேற்று ரத்து செய்யப்பட்டது. அனைத்து அரசு ஊழியர்களும் மீட்பு நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள போஸ்கனா நதியை கடக்க முயன்ற ராணுவ வீரர்கள் தெலு ராம், குல்தீப் சிங் ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. தோடா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து சிக்கியதில் 2 பயணிகள் உயிரிழந்தனர்.

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில் சுமார் 3,000 வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. ஜீலம் நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.

மலைப் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் சிம்லா, குலு, மண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று மட்டும் 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 9 இடங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டன.

சிம்லாவில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். குலு, சம்பா பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கனமழை தொடர்வதால் இமாச்சல பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் தலைநகர் லக்னோ உட்பட 39 நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. முஸாபர்நகர் பகுதியில் வீடு இடிந்து, தாய், மகள் உயிரிழந்தனர். மெயின்புரி பகுதியில் மின்னல் பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர். மொரதாபாத் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளில் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருந்து கேதார்நாத் கோயிலுக்கு 11 பக்தர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் நேற்று தெஹ்ரி கார்வால் பகுதியில் சென்றபோது நிலச்சரிவில் சிக்கியது. இதன்காரணமாக கங்கை நதியில் வாகனம் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 5 பேர் மீட்கப்பட்டனர். 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் 5 பேர், காஷ்மீரில் 4 பேர், உத்தர பிரதேசத்தில் 4 பேர், உத்தராகண்டில் 3 பேர் என ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசத்தின் மொத்தம் உள்ள 53 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹரியாணாவில் சண்டிகர் உள்ளிட்ட 55 நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பஞ்சாபின் மொகாலி நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா, கோவா, குஜராத், மேற்குவங்கம், ஒடிசா மற்றும்வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழையால் வட மாநிலங்களில் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமித் ஷா ஆலோசனை

வெள்ள நிலவரம் குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் போக்குவரத்தை சரி செய்வது குறித்தும், காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x