Published : 10 Jul 2023 08:32 AM
Last Updated : 10 Jul 2023 08:32 AM
லக்னோ: அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல், சுற்றுலா படகு இல்லம் போன்ற சேவைகளை உத்தர பிரதேச அரசு தொடங்கவுள்ளது.
இது குறித்து உத்தர பிரதேச சுற்றுலாத்துறையின் துணை இயக்குனர் ஆர்.பி யாதவ் கூறியதாவது:
அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல் மற்றும் படகு இல்லம் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக 25 மீட்டர் நீளம் 8.3 மீட்டர் அகலத்தில் சொகுசு கப்பல் ரூ.11 கோடியில் வாங்கப்படும். இதில் 100 பேர் பயணம் செய்யலாம். கப்பலின் முதல் தளத்தில் திறந்தவெளிப் பகுதி இருக்கும். இதில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் கப்பலின் முதல் தளத்திலிருந்து சரயு ஆற்றின் படித்துறைகளில் மாலையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சிகளை பார்வையிட முடியும். இதேபோல் படகு இல்ல சேவைகளும் தொடங்கப்படும். இவற்றுக்கான படகுத்துறை அமைக்க நயா படித்துறையில் சவுத்தரி சரன் சிங் பூங்கா அருகேயுள்ள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடம் வழங்கப்படும்.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் நேரத்தில் இந்த சொகுசு கப்பல் மற்றும் படகு இல்ல சேவைகளை தொடங்கும் வகையில் பணிகளை விரைவுபடுத்த இவற்றை இயக்கும் நிறுவனங்களிடம் உ.பி. அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சேவைகள் மூலம் தீபோத்சவம் நடைபெறும் நேரத்திலும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இரண்டு சொகுசு கப்பல் சேவைகள் தொடங்கப்படும். முதல் கப்பல் அக்டோபர் மாதம் தயாராகிவிடும். இந்த சொகுசு கப்பல்களுக்கு கனக் மற்றும் புஷ்பக் என பெயரிடப்படும். நயா படித்துறை தவிர குப்தர் படித்துறையிலும் மற்றொரு படகுத்துறை அமைக்கப்படும். இந்த 2 சொகுசு கப்பல்களும் பகல் நேரத்தில் 9 கி.மீ தூரத்துக்கு பயண சேவைகளை அளிக்கும். இந்த சொகுசு கப்பல்கள் பேட்டரி மற்றும் சூரிய சக்தியில் இயக்கும். இந்த சொகுசு கப்பல் சேவைக்காக அலக்நந்தா க்ரூசேலைன் நிறுவனத்துடன் உ.பி. அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் வாரணாசியில் இதேபோன்ற சேவையில் ஈடுபட்டுள்ளது. அயோத்தியா க்ரூசேலைன் என்ற மற்றொரு நிறுவனத்துடனும் உ.பி அரசு ஒப்பந்தம் செய்யவுள்ளது. இரு கப்பல்களில் ஒரு கப்பல் குப்தர் படித்துறையிலும், மற்றொரு கப்பல் கேரளாவின் கொச்சியிலும் கட்டப்பட்டு வருகிறது. இந்த இரட்டை அடுக்கு சொகுசு கப்பலில் டிஜிட்டல் திரைகள், செல்ஃபி பாய்ன்ட், விடுதிகள் உட்பட நவீன வசதிகள் இருக்கும்.
இவ்வாறு ஆர்.பி.யாதவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT