Published : 08 Jul 2023 05:38 PM
Last Updated : 08 Jul 2023 05:38 PM
கொல்கத்தா: 73,887 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்த நிலையில், இப்போது மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள 73,887 உள்ளாட்சிப் பதவிகளுக்காக இன்று (ஜூலை 8) ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதென்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் களத்தில் 2.06 லட்சம் வேட்பாளர்கள் உள்ள நிலையில், வாக்களிக்க 5.67 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். ஜூலை 1 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் வன்முறைகளைக் கணித்து மாநிலத் தேர்தல் ஆணையம் கூடுதலாக மத்தியப் படைகளை வரவழைத்திருந்தது.
ஆனால், கூச்பெஹார் மாவட்டத்தில் ஃபாலிமாரி கிராமப் பஞ்சாயத்தில் பாஜக தேர்தல் அதிகாரி மாதப் பிஸ்வாஸ் கொலை செய்யப்பட்டார். வாக்குச்சாவடிக்கு வந்த அவரை உள்ளேயே நுழைய விடாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் தடுத்து கொலை செய்ததாக தகவல் வெளியாக, மாநிலம் முழுவதும் பரவலாக வன்முறை பற்றிக் கொண்டது. கூச்பெஹார், 24 நார்த் பர்கானாஸ், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை மாலை வரை ஓயவில்லை.
பலியானோர் விவரம்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகளில் தலா 2 தொண்டர்கள், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத், கூச்பெஹார், கிழக்கு புர்த்வான், மால்டா, 24 சவுத் பர்கானாஸ் போன்ற பகுதிகளில் இந்த உயிர்ப் பலி சம்பவங்கள் நடந்துள்ளன.
வன்முறை குறித்து பாஜக - திரிணமூல் கருத்து: பாஜக பிரமுகர் ராகுல் சின்ஹா கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலை வன்முறை சிதைத்துவிட்டது. தேர்தல் என்ற பெயரில் கேலிக் கூத்து நடத்துகிறார்கள். தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியும் இணைந்து எல்லா முடிவுகளையும் எடுக்கும்போது திரிணமூல் கட்சியினர் இப்படித்தான் பூத்களை கைப்பற்றுவார்கள், வாக்குப் பெட்டிகளை தூக்கிச் செல்வார்கள். இது மக்களுக்கான தேர்தல் என்று நிச்சயமாகக் கூற முடியாது" என்றார்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ, “கூடுதல் மத்தியப் படைகளைக் கோரியிருந்தோம். ஆனால், அவர்கள் வந்தபாடில்ல. வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு எதிர்க்கட்சிகளின், குறிப்பாக பாஜகவின் சதியே காரணம்” என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT