Published : 08 Jul 2023 11:19 AM
Last Updated : 08 Jul 2023 11:19 AM

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் | வன்முறைகளுக்கு இடையே வாக்குப்பதிவு - பலர் பலி; மாறிமாறி குற்றஞ்சாட்டும் கட்சிகள்

24 நார்த் பர்கானாஸ் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர் படுகொலையைக் கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டம் வன்முறையாக மாறியது.

கொல்கத்தா: மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் களம் வன்முறைக் களமாக மாறியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி தங்களின் தொண்டர்கள் மூவர் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாஜகவும் தங்கள் கட்சியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வன்முறைக்கு மாறிமாறி கைகாட்டி வரும் நிலையில் இதுவரை மொத்தம் 7 பேர் வரை உயிரிழந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலம் முழுவதும் இன்று (ஜூலை 8) ஒரே கட்டமாக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு ஜூலை 11 வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை 73,887 உள்ளாட்சி இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் பிரச்சாரங்களின் போதே வன்முறை, உயிர்ப்பலிகள் இருந்ததால் பாதுகாப்புக்காக கூடுதல் மத்தியப் படைகளை மாநில தேர்தல் ஆணையம் வரவழைத்திருந்தது.

கட்டுக்கடங்காத வன்முறை: கடந்த 2018-ல் உள்ளாட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரிய சிக்கல் ஏதுமில்லாமல் 34 சதவீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டது. ஆனால் அப்போதும் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தன. இந்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தேர்தல் தொடங்கியிருந்தாலும் கூட ஆங்காங்கே கட்டுக்கடங்காமல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. 73,887 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்தல் களத்தில் 2.06 லட்சம் வேட்பாளர்கள் உள்ளனர். வாக்களிக்க 5.67 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

கூச்பெஹார் மாவட்டத்தில் ஃபாலிமாரி கிராமப் பஞ்சாயத்தில் பாஜக தேர்தல் அதிகாரி மாதப் பிஸ்வாஸ் கொலை செய்யப்பட்டார். வாக்குச்சாவடிக்கு வந்த அவரை உள்ளேயே நுழையவிடாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் தடுத்து கொலை செய்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதனை திரிணமூல் மறுத்து வருகிறது. இந்தக் கொலை குறித்த தகவல் பரவ ஆங்காங்கே பல பகுதிகளிலும் வன்முறைகள் பரவிவருகின்றன.
இதேபோல் நார்த் 24 பர்கானாஸ் பகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரான அப்துல்லா (41) வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டதில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலையைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் டக்கி சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர முர்ஷிதாபாத்தில் நேற்றிரவு முழுவதும் வன்முறைகள் நடந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபர் அலி என்பவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெஜிநகர், கார்கிராம் பகுதிகளில் நடந்த வன்முறையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும், கூச்பெஹார் மாவட்டத்தின் துஃபாகஞ்ச் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகள் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குனால் கோஷ் கூறுகையில், "வாக்குப்பதிவு அமைதியாகத் தான் தொடங்கியது. ஆனால் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்றிரவு முதலே திரிணமூல் தொண்டர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டனர். எங்கள் கட்சியின் தொண்டர்கள் மூவர் இதுவரை உயிரிழந்துள்ளனர். டோம்காலில் எங்கள் கட்சியினர் இருவர் தாக்கப்பட்டத்தில் படுகாயமடைந்துள்ளனர்" என்றார். இதற்கிடையில் மால்டாவில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் ஒருவர் காங்கிரஸ் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x