Published : 08 Jul 2023 05:15 AM
Last Updated : 08 Jul 2023 05:15 AM
புதுடெல்லி: இந்திய, இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது இங்கிலாந்தில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய தூதரகங்கள், இந்து கோயில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த பின்னணியில் இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டிம் பாரோ, இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள சர்தார் படேல் பவனில் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்பாடுகள் குறித்தும், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த போராட்டம் குறித்தும், இந்தியாவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்தும் அஜித் தோவல் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
இதை ஆமோதித்த டிம் பாரோ, இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித்தார்.
அதன்பிறகு பாதுகாப்பு விவகாரம் சார்ந்த விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.
சீனாவின் ஆதிக்கம்: சர்வதேச அரங்கில் சீனாவின் ஆதிக்கம், அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்தனர். மேலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தலை தடுப்பது, பாதுகாப்பு துறை சார்ந்த தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் அஜித் தோவலும், டிம் பாரோவும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT