Published : 08 Jul 2023 05:12 AM
Last Updated : 08 Jul 2023 05:12 AM
ராய்ப்பூர் / வாரணாசி: உத்தர பிரதேசத்தில் ரூ.12,600 கோடி, சத்தீஸ்கரில் ரூ.7,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். அப்போது ராய்ப்பூர் - கோடெபோட், பிலாஸ்பூர்- பத்ரபாலி இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராய்ப்பூர்-காரியார் இடையே 103 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையும், கியோட்டி - அந்தகர் இடையே 17 கிமீ புதிய ரயில் பாதையையும், கோர்பாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கான ஆலையையும் அவர் தொடங்கி வைத்தார். இதுதவிர்த்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பயனாளர் அட்டை விநியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அந்தகர் மற்றும் ராய்பூர் இடையே புதிய ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
ஒட்டுமொத்தமாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.7,600 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கியும் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்தத் திட்டங்கள் குறித்து அவர் பேசுகையில், “கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு சத்தீஸ்கர் மாநிலத்தில் 3,500 கிமீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரையில் 3,000 கிமீ அளவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான சத்தீஸ்கரில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களால் சத்தீஸ்கரில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். மக்களின் வாழ்க்கை மேம்படும்” என்று தெரிவித்தார்.
கீதா பதிப்பக நூற்றாண்டு விழா: உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் செயல்படும் கீதா பதிப்பகத்துக்கு அண்மையில் சர்வதேச காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது ரூ.1 கோடி ரொக்கம், பாராட்டு சான்றிதழ் அடங்கியது. விருதினை மட்டும் பெற்றுக் கொள்வோம், ரொக்க பரிசை ஏற்க மாட்டோம் என்று கீதா பதிப்பக அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
இந்த சூழலில் கோரக்பூரில் கீதா பதிப்பகத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது, “கீதா பதிப்பகத்தை நிறுவனமாக கருதவில்லை. இது ஒரு நம்பிக்கை. இந்த பதிப்பகம் மனித குல மாண்புகளைப் பாதுகாக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு பதிப்பகம் கோயில் போல விளங்குகிறது. அன்பு, அறிவு, ஆராய்ச்சி என பன்முகத்தன்மை கொண்டதாக பதிப்பகம் திகழ்கிறது" என்று தெரிவித்தார்.
2 வந்தே பாரத் ரயில்கள்: இதன்பிறகு கோரக்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்படி கோரக்பூர்- லக்னோ, ஜோத்பூர்- அகமதாபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் கோரக்பூர் ரயில் நிலையத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் வந்தே பாரத் ரயிலில் சிறார்களுடன் அவர் கலந்துரையாடினார்.
கோரக்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பேசும்போது, “நடுத்தர வர்க்க மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்தே பாரத் ரயில் சேவை அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் பகுதிக்கு வந்தே பாரத் ரயில் சேவை வேண்டும் என்று கடிதங்களை எழுதி குவித்து வருகின்றனர். இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
ரூ.12,100 கோடி திட்டங்கள்: இதன்பிறகு தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்றார்.அங்கு அவர் ரூ.12,100 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
‘காங்கிரஸின் ஏடிஎம் சத்தீஸ்கர்': சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவடைய உள்ளது. ஆனால் இதுவரை ஒரு வாக்குறுதியைகூட நிறைவேற்றவில்லை. மதுபான விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது.
ஊழல்தான் காங்கிரஸின் கொள்கை. ஊழல் இல்லாமல் காங்கிரஸால் சுவாசிக்க முடியாது. நிலக்கரி, மணல், நிலம் என அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஊழலில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் மையமாக சத்தீஸ்கர் உள்ளது.
மத்தியிலும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் நல்லாட்சி நடைபெறுகிறது. இது சிலருக்கு பிடிக்கவில்லை. ஊழல் கறை படிந்தவர்கள் ஓரணியில் திரள முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT