Published : 07 Jul 2023 02:17 PM
Last Updated : 07 Jul 2023 02:17 PM
புதுடெல்லி: ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பான குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்த வழக்கை மேலும் தொடர்வதற்கான உறுதியை இரட்டிப்பாக்கியுள்ளது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மோடி பெயர் குறித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள குஜராத் உயர் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பான குஜராத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பினை நாங்கள் பார்த்தோம். அதில் நீதிபதி தெரிவித்துள்ள காரணங்கள் ஆராயப்படுகிறது. இந்தத் தீர்ப்பு, இவ்வழக்கை மேலும் தொடர்வதற்கான உறுதியை இரட்டிப்பாக்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.
நீதியின் கேலிக் கூத்து: குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் சிங் சுர்ஜ்வாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நீதியின் கேலி கூத்து! நீரவ் மோடி, நீஷல் மோடி, மெஹூல் சோக்சி போன்ற வங்கி மோசடிக்காரர்கள் தண்டிக்கப்படாமல், வஞ்சகம் மற்றும் பொதுப்பணக் கையாடல் குறித்து அம்பலப்படுத்தும் அமைதியின் தூதுவர் தண்டிக்கப்படுகிறார். ராகுல் காந்தி உண்மையின், சத்தியத்தின், அச்சமற்ற, அதிகாரத்திலிருப்பவர்களை கேள்வி கேட்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். என்ன நடந்தாலும், நாங்கள் உண்மையின் பாதையில் அச்சமில்லாமல் அணி வகுத்துச் செல்கின்றோம். சத்தியமவே ஜெயதே!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஜனநாயகப் படுகொலை: தீர்ப்பு குறித்து கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.கே.சிவகுமார் கூறுகையில்,"நியாயம் வெற்றி பெறாதது மிகவும் துரதிர்ஷடமானது. இது ஜனநாயக படுகொலை. இன்னும் ஒட்டுமொத்த நாடும் எதிர்க்கட்சிகளும் ராகுலின் பின்னால் நிற்கின்றன. நாடு முழுவதையும் ஒருங்கிணைக்க போராடும் சிறந்த தலைவர் அவர். பாஜக தலைவர்களால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை நாடாளுமன்றதிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றனர். அவர் (ராகுல் காந்தி) இன்னும் வலு பெறுவார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நீதித் துறையை நாங்கள் நம்புகிறோம்: காங்கிரஸ் கட்சியின் பவன் குமார் பன்சால் கூறுகையில், "நாங்கள் எப்போதும் நீதித் துறையை உயர்வாக மதிக்கிறோம். ஆனாலும் இந்த முடிவு தவறானது என்று நம்புகிறோம். ராகுல் காந்தியின் அரசியல் தலைவிதி நீதிமன்றத்தின் தீர்ப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது இந்த நாட்டின் மக்களால் தீர்மானிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் ராகுல் காந்தியின் பக்கம் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT