Published : 07 Jul 2023 01:21 PM
Last Updated : 07 Jul 2023 01:21 PM
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அந்த வழக்கு கடந்துவந்த பாதை குறித்த ஒரு டைம்லைன்.
மோடி பெயர் வழக்கின் பின்னணி? கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
மார்ச் 23, 2023: அவதூறு வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
மார்ச் 24, 2023, ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.
ஏப்ரல் 20, 2023: ராகுல் காந்தி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் தன் மீதான வழக்கின் தீர்ப்பு மீது இடைக்கால தடை கோரி அணுகினார். ஆனால் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. எம்.பி.யாகவும், நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவராகவும் இருந்த நபர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
ஏப்ரல் 25, 2023: சூரத் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மே மாதம் குஜராத் உயர்நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு இந்த மனுவை விசாரித்தபோது இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு வாய்ப்பிலை என்று கூறியதோடு கோடை விடுமுறைக்குப் பின்னர் இதன் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி ஒத்திவைத்தது.
பாட்னாவில் வழக்கு: சூரத்தில் புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்ட நிலையில் ராகுல் மீது மேலும் பல அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநிலங்களவை எம்.பி. சுஷில் குமார் மோடி பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் அவதூறு வழக்கைத் தொடந்தார்.
ஜார்க்கண்ட் நீதிமன்றத்தின் உத்தரவு: வழக்கறிஞர் பிரதீப் மோடி என்பவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஓர் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். இதில் ஜூலை 4 ஆம் தேதி நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.
ஜூலை 7, 2023: தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
நீதிபதியின் கண்டனம்: தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஹேமந்த் பிரச்சக், "இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ராகுல் காந்திக்கு எதிராக மேலும் பல வழக்குகள் தாக்கலாகின. அதில் ஒன்று வீர் சாவர்க்கரின் பேரன் தாக்கல் செய்த வழக்கு. எனவே, தண்டனை என்பது நிச்சயமாக அநீதி அல்ல. தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்பதும் விதிமுறை அல்ல. அது விதிவிலக்கு. ராகுல் காந்தி முகாந்தரமே இல்லாமல் இடைக்கால தடை கோருகிறார்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT