Published : 07 Jul 2023 10:03 AM
Last Updated : 07 Jul 2023 10:03 AM
திருவனந்தபுரம்: பொது சிவில் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கள்ள மவுனம் காப்பது ஏன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பொது சிவில் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறதா? காங்கிரஸ் கட்சியின் சந்தேகத்திற்கிடமான மௌனம் வஞ்சகமானது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான சங்பரிவார்களின் தாக்குதல்களை எதிர்ப்பது காலத்தின் தேவையாக இருக்கும்போது, அவர்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க காங்கிரஸ் கட்சி தயாரா?" என்று கேட்டுள்ளார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை பேசிய இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங்கின் மகனும், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரதிபா சிங்கின் மகனும், அம்மாநில அமைச்சருமான விக்ரமாதித்ய சிங், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்று தெரிவித்திருந்தார். “காங்கிரஸ் கட்சி எப்போதுமே இந்தியாவின் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பொது சிவில் சட்டத்தைப் பொருத்தவரை, இதில் நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமையை நம்புகிறோம். எந்தச் சட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன், இந்தச் சட்டம் தங்களுக்கு எதிரானது என்று யாரும் நினைக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் இடையே வலுவான கருத்தொற்றுமை உருவாக்கப்பட வேண்டும். அனைவரின் ஒப்புதலோடு இந்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று விக்ரமாதித்ய சிங் தெரிவித்திருந்தார்.
மேலும், “இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் இறுதி முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பொருத்தவரை, நாங்கள் இந்திய மக்களின் தேசிய உணர்வுகளுடன் நிற்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு குடும்பம் இரண்டு வித சட்டங்களால் நிர்வகிக்க முடியாது என்றும் எனவே, நாடு எனும் குடும்பத்திற்கு ஒரே மாதிரியான சட்டம் தேவை என்றும் கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், "ஒரு தேசத்தை ஒரு குடும்பத்திற்கு சமன் செய்வது சரியாகத் தோன்றினாலும், உண்மை மிகவும் வித்தியாசமானது. குடும்பம் இரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் கூட பன்முகத்தன்மை இருக்கும். அரசியல்-சட்ட ஆவணமான அரசியல் சாசனத்தின் மூலம் ஒரு நாடு ஒன்றிணைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு இந்திய மக்களின் பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு கனவு. பெரும்பான்மை அரசாங்கத்தால் அதை மக்கள் மீது திணிக்க முடியாது.
பொது சிவில் சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்டால் அது பிளவுகளை விரிவுபடுத்தும். பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் உரை, நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையின்மை, வெறுக்கத்தக்க குற்றங்கள், பாகுபாடு மற்றும் மாநிலங்களின் உரிமைகளை மறுப்பது ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்காளர்களைப் பிரித்து அடுத்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பொது சிவில் சட்டத்தை களமிறக்குகிறது” என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழுவானது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில், பொது சிவில் சட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT