Published : 07 Jul 2023 05:38 AM
Last Updated : 07 Jul 2023 05:38 AM
புதுடெல்லி / மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் சரத் பவார் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பிறகு ‘நானே கட்சியின் தலைவர்’ என்று சரத் பவார் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) கடந்த ஞாயிற்றுக்கிழமை உடைந்தது. சரத் பவாரின் அண்ணன் மகனும்கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார், கட்சி எம்எல்ஏக்கள் பலருடன் ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்வராக பதவியேற்றார். அஜித் பவாருடன் சென்ற எம்எல்ஏக்களில் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அஜித் பவார் தரப்பில் கட்சியின் மாநிலத் தலைவராக சுனில் தட்கரே அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அஜித் பவார் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களை சரத் பவார் நீக்கினார். 9 எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரினார்.
போட்டி கூட்டம்: சரத் பவார், அஜித் பவார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் தனித்தனியே தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினர். சரத் பவார் கூட்டத்தில் 13 எம்எல்ஏக்களும் அஜித் பவார் கூட்டத்தில் 29 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இதையடுத்து கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சரத் பவார் தலைமையில் என்சிபி செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறியதாவது:
இக்கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஜக அணியில் இணைந்த எம்.பி.க்கள்பிரபுல் படேல், சுனில் தட்கரே மற்றும் 9 தலைவர்களை கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கு செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
என்சிபி, சரத் பவார் பக்கம் உள்ளது. அதன் தேசியத் தலைவராக சரத் பவார் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கட்சியின்தேசியத்தலைவர் என்று ஒருவர் (அஜித் பவார்) கூறிக்கொள்வதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எங்கள் அமைப்பு இன்னும் அப்படியே உள்ளது, நாங்கள் சரத் பவாருடன் இருக்கிறோம். இவ்வாறு பி.சி. சாக்கோ கூறினார்.
இக்கூட்டத்தில் சரத் பவார் கூறும்போது, “என்பிசி.க்கு நானே தலைவர். பெரும்பான்மை இருப்பதாக அஜித் பவார் கூறுவதில் உண்மை வெளிவரும்” என்றார்.
தீர்மானங்கள்
பாஜக அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத மற்றும் ஜனநாயக விரோத செயல்கள் மற்றும் அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்ககு எதிராக போரிடுவது, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் பெண்களின் துயருக்கு காரணமான பாஜகவின் கொள்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பூர்மானது அல்ல: இதையடுத்து சரத் பவார் கூட்டிய சட்டம் சட்டப்பூர்வமானது அல்ல என்று அஜித் பவார் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அஜித் பவார் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “என்சிபி தேசிய தலைவராக அஜித் பவார் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல்ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் முடிவுஎடுக்கும் வரை எவரும் எந்தவொரு கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்க முடியாது. எனவே இன்று நடைபெற்ற கூட்டம் சட்டப்பூர்வமானது அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் சட்டப்பூர்வமானவை அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
ராகுல் சந்திப்பு: சரத் பவார் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிறகு அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT