Published : 12 Jul 2014 09:15 AM
Last Updated : 12 Jul 2014 09:15 AM
பாஜகவை ஆட்சியில் அமர்த்த நரேந்திர மோடி கையாண்ட சித்தாந்தங்களை அப்படியே தன் பட்ஜெட்டிலும் பின்பற்றியிருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி
வேகமாக வளர்ந்து வரும் இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் ஆவல்கள், எதிர்பார்ப்புகளை முன்னிறுத்தி அரசியல் பயணத்தை மேற்கொண்ட மோடி, தன் மையக் கொள்கையான இந்துத்துவாவையும் கைவிடவில்லை.
அருண் ஜேட்லியின் பட்ஜெட் டிலும் இவைதான் எதிரொலித்துள்ளன. நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்துக்குள் புதிதாக நுழைந்துள்ளவர்களுக்கு ஏராளமான உத்தரவாதங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவர்களின் தேவைகளில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. அதைப் போலவே, புதிய திட்டங்களுக்கு, சங் பரிவார் அமைப்புகளால் போற்றப்படும் பாஜகவின் சித்தாந்த முன்னோடிகள் ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பெயர்களைச் சூட்டி, இந்துத்துவ அரசியலையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெயப்பிரகாஷ் நாராயண், சர்தார் வல்லபாய் படேல் போன்றோரும், ஜேட்லியின் பட்ஜெட் தாக்கலில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
மோடி கடந்த 2012-ம் ஆண்டு முன்வைத்த புதிய நடுத்தர வர்க்கம் என்ற கோஷம், இந்த பட்ஜெட் உரையில் 5 இடங்களில் கவனம் பெற்றுள்ளது.
நவீன நகரங்கள் (ஸ்மார்ட் நகரம்), மலிவு விலை குடியிருப்புகளை மேம்படுத்துதல், சுகாதார நலத்திட்டங்கள், வரிச் சலுகை, சேமிப்புகளின் மீதான ஊக்கத்தொகை உள்ளிட்டவை புதிய நடுத்தரவர்க்கத்தினருக்கு பலனளிக்கக் கூடியவை.
இச்சலுகைகள் இன்னும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், புதிய நடுத்தர வர்க்கத்தினரை தனது பக்கம் தக்கவைத்துக் கொள்ள முடியும் என பாஜக நம்புகிறது.
நகர்மயமாதல், இணைய தொடர்பு வசதிகள் புதிய நடுத்தரவர்க்கத்தினரின் அவசியத் தேவைகள். இந்த பட்ஜெட்டில் இவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கருவிகள் வைத்துள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது என ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கிராமப் பகுதிகளில் அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவை வழங்குவதற்காக, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்கெனவே இதேபோன்ற திட்டங்களை அறிவித்திருந்தாலும், இத்திட்டங்களில் அரசியல் ஆதாயமிருப்பதை பாஜக உணர்ந்துள்ளது.
ஜாதிக்கட்சிகளைப் புறம்தள்ளி, பாஜக அதிக வாக்குகளைக் கைப்பற்றியிருக்கிறது. ஆகவே, பெரும் எதிர்பார்ப்புகளை உடைய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பட்ஜெட்டில் போதிய அறிவிப்புகள் உள்ளன.
ஜம்மு-காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்த பண்டிட்டுகள், அம்மாநிலத்துக்கு புதிய அறிவிப்புகள், வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய திட்டங்கள் என்பன பாஜகவின் தேசியவாத அரசியலுக்கான சமிக்ஞைகள். போர் நினைவுச் சின்னம், காவலர் நினைவுச் சின்னம் ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்கவை.
சிறுபான்மையினருக்கு பெரிய அளவிலான அறிவிப் புகள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டேயிருக்கின்றன. உயர்கல்விக்கான நிதியுதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை எதிர்த்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
சிறுபான்மையினருக்கான பாரம்பரிய கலைப் பயிற்சி மற்றும் மேம்பாடு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசின் சில நலத்திட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சில முக்கிய தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
ஷியாமாபிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புற திட்டம்:
*கிராமப்பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்ட அடிப்படையிலான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
*திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
*தனியார்-பொது பங்களிப்பு திட்டத்தை ஊக்குவித்தல்
பண்டிட் மதன் மோகன் மாளவியா புதிய ஆசிரியர் பயிற்சித் திட்டம்
*புதிய பயிற்சிக் கருவிகளை அறிமுகம் செய்தல் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவித்தல்
*ரூ. 500 கோடி ஒதுக்கீடு
தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டம்
*அனைத்து குடியிருப்புகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குதல்
*ஊரகப் பகுதிகளுக்கு மின் விநியோகத்தை அதிகரித்தல்
*துணை மின்பகிர்வு மற்றும் விநியோக முறையை வலுப்படுத்துதல்
*ரூ. 500 கோடி ஒதுக்கீடு
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் திட்டங்கள்
ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம்
நகர்ப்பகுதியில் வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம்
வறுமைக்கோட்டுக்குகீழ் இருப்பவர்களுக்கான இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்
ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்
நிதிமுதலீடுகளில் சேமிப்பை ஊக்குவித்தல்
ராஜீவ் காந்தி வளரிளம்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்
வளரிளம் பெண்களுக்கான சுயமேம்பாட்டு முயற்சிகள்
ராஜீவ் காந்தி பஞ்சாயத் சாசக்திகரன் அபியான்
ஊராட்சிகளை வலுப்படுத்துதல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT